நான் யார் தெரியுமா? மது போதையில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் வாக்குவாதம் செய்த குடி மகன்கள். !
கடலூர்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து மதுபான கடத்தலை தடுப்பதற்காக, நேற்று கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது `போலீஸ்' என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்று புதுச்சேரியில் இருந்து கடலூரை நோக்கி கட்டுப்பாடின்றி வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்தவர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.
அதையடுத்து காரை ஓட்டி வந்த நபரை அழைத்த எஸ்.பி ஜெயக்குமார், `காரில் ஏன் போலீஸ் என்று ஓட்டி வைத்திருக்கிறாய்?' என்றார்.
அதற்கு அவர் என் மனைவி போலீஸாக இருக்கிறார் என்று சொன்ன அவரிடம், `உன் மனைவி போலீஸாக இருந்தால், நீ எப்படி காரில் போலீஸ் என்று ஒட்ட முடியும் ? கவர்ன்மெண்ட் வண்டியா இது ?' என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
அத்துடன் காரில் ஒட்டப்பட்டிருந்த `போலீஸ்' ஸ்டிக்கரையும் அகற்றுவதற்கு உத்தரவிட்டார். தொடர்ந்து காரை ஒட்டி வந்த அந்த நபர், `காரில் அமர்ந்திருப்பவர் கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்' என்றார்.
அப்போது, `யாராக இருந்தால் என்ன… நாங்களும் கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்தான்' என்று எஸ்.பி ஜெயக்குமார் பேசிக் கொண்டிருக்கும்போதே, காரில் இருந்து இறங்கிய போதை நபர் ஒருவர், `ஏய் நான் யார் தெரியுமா… கலெக்டர் பி.ஏ… என் அப்பா கலெக்டர் பி.ஏ…' என்று போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்.
அதையடுத்து அங்கிருந்த போலீஸார் அந்த போதை நபரை காரில் அமர வைத்தனர். ஆனால் அப்போதும் போதை தலைக்கேறிய நிலையில் அவர் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.
அதில் டென்ஷனான எஸ்.பி ஜெயக்குமார், காரில் இருந்த நபரை இறக்கி கைது செய்ய உத்தரவிட்டார். அதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீஸார், நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, `குடி போதையில் தப்பா பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க' என்று போலீஸாரிடம் அழுது புலம்பினார் அந்த போதை நபர்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.பி ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ``பண்டிகைக் காலங்களில் கொண்டாட்டங்கள் இருப்பது தவறில்லை. ஆனால் அது மற்றவர்களை பாதிக்கக் கூடாது. இவர்களின் கொண்டாட்டங்களுக்காக பொதுமக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது,'' என்றார்.