தி மு க பெண் கவுன்சிலர் மற்றும் கணவர் கட்சியிலிருந்து இடை நீக்கம். !
சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி 113-வது வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகிக்கும் பிரேமா என்பவர் கடந்த ஆண்டு மழை காலத்தின்போது வடிகால்வாய்கள் புதுப்பிக்காததே மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்ற கூறிய காரணத்தால், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கவுன்சிலர் பிரேமாவின் கணவரான நுங்கை எஸ்.சுரேஷை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, திமுக பொதுச்செயலாளர் துறைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னையில் மழையால் ஏற்படும் வெள்ளம் மற்றும் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி ஒவ்வொரு ஆண்டும் சவாலாக இருந்து வருகிறது. அரசும் அதற்கு மாற்றுத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர்வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் மழை காலத்தில் மழையால் தண்ணீர் தேங்கி சில பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் சரியாக முடிக்கப்படாததே தண்ணீர் தேங்க காரணம் என்றும், 113வது வார்டு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் அமைப்புகள் புதுப்பிக்கப்படாமல் பழைய வடிகாலாகவே இருப்பதாகவும் இதனால், மழைநீரை வெளியேற்ற முடியவில்லை என்றும் சென்னை மாநகராட்சி 113-வது வார்டு கவுன்சிலராக உள்ள திமுகவைச் சேர்ந்த கவுன்சிலரான பிரேமா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குற்றம் சாட்டினார். ஆளும் கட்சி கவுன்சிலரான பிரேமா தெரிவித்த கருத்துகள் கட்சித் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியாக கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை மேற்கு மாவட்டத்தின் 113-வது வார்டு கவுன்சிலர் பிரேமா சுரேஷ், திமுக கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தற்காலிமாக நீக்கி கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டிருந்தார்.
தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தாலும் அவருடைய கணவர் நுங்கை சுரேஷ் தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து வந்தார். ஆனால் அவர், மனைவி பிரேமாவின் கவுன்சிலர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு வருவதாக புகார்கள் வந்ததாம். இதையடுத்து நுங்கை எஸ்.சுரேசும் தி.மு.க.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பில் கூறுகையில், "சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி 113-வது வட்டத்தை சேர்ந்த நுங்கை எஸ்.சுரேஷ் கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.' என்று கூறப்பட்டுள்ளது.
பெண் கவுன்சிலர்கள் நடவடிக்கைகளில் கணவர்களின் தலையீடு இருக்க கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துரைமுருகன் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், 'தியாகராயநகர் கிழக்கு பகுதி 135-வது வட்ட செயலாளர் எம்.எஸ்.பழனிக்கு பதிலாக அசோக் நகர் 11-வது அவென்யூவை சேர்ந்த ஆர்.லோகு என்ற லோகநாதன் வட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்" இவ்வாறு துரைமுருகன் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.