விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.. ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் - உயர் நீதிமன்றம் உத்தரவு.!

நடிகர் விஜய்

விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.. ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் - உயர் நீதிமன்றம் உத்தரவு.!

வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் வருமானவரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு விஜய் வீட்டில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, 'புலி' படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை கண்டறிந்தது.

மேலும் வருமானத்தை மறைத்ததற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும் எனவும், ஆனால் காலதாமதமாக 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமெனவும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் வருமான வரிச்சட்டப்படி விஜய்-க்கு அபராதம் விதித்தது சரிதான் என வருமான வரித்துறை வாதிட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி செந்தில் குமார ராமமூர்த்தி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து அவருக்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என்றும் உத்தரவிட்டார்.