10,000 பேரை திரட்டி திமுகவில் இணைத்த வைத்திலிங்கம்.. அசந்து போன முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தஞ்சாவூர்

10,000 பேரை திரட்டி திமுகவில் இணைத்த வைத்திலிங்கம்.. அசந்து போன முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 10,000 பேர் இன்று திமுகவில் இணைந்தனர்.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அண்மையில் திமுகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் 10,000 பேர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்வில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "வைத்திலிங்கம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக பணியாற்றுவார்" எனத் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த வைத்திலிங்கம், அதிமுக பிளவுபட்டபோது, சசிகலாவுடன் பயணித்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்த பின்னர் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டார். ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று முயற்சி எடுத்து அவர்களை ஒன்றிணைத்தார்.

அதன் பின்னர், மீண்டும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை ஏற்பட்டபோது, எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நின்றார். அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். ஓபிஎஸ்ஸுக்கு வலதுகரமாக வைத்திலிங்கம் செயல்பட்டு வந்தார்.

ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைய மேற்கொண்ட முயற்சிகள் பலிக்காத நிலையில் தான் அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பக்க பலமாக இருந்த வைத்திலிங்கமும் அண்மையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். வைத்திலிங்கம் இதுவரை 4 முறை ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர், முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைத்திலிங்கம், "நான் அதிமுகவில் இருந்து விலகி, அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் நான் இணைந்துள்ளேன். முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் போற்றுகிறார்கள், புகழ்கிறார்கள் என்றால், எல்லோரின் தேவைகளையும் நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களின் மனதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். திமுகதான் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுகிறது. அதிமுக சர்வாதிகாரமாகச் செயல்பட்டு வருகிறது. 26 ஆம் தேதி தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு விழா நடக்க உள்ளது." எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் 10,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர். அவர்களை திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் கட்சிப் பணியாற்ற வரவேற்றார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இது இணைப்பு விழாவா? இணைப்பு விழா மாநாடா? என்று சந்தேகம் வரும் அளவுக்கு பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தாய்க் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அடுத்த 1 வார காலத்திற்குள்ளாக இந்த சிறப்பான இணைப்பு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார். நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே அவர் இந்த இயக்கத்திற்காக சிறப்பாகப் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தலைமையில் அவர்களுக்கு விசுவாசமாக இருந்து சுறுசுறுப்பாகப் பணியாற்றியவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக உடைந்து சின்னாபின்னமான பிறகு சட்டமன்றத்தில் எதையோ பறிகொடுத்தது போலவும், வேண்டா வெறுப்பாகவும் வைத்திலிங்கம் அமர்ந்திருப்பார். அவரது முகத்தில் ஒரு சோகம் இருந்துகொண்டே இருக்கும். அதற்கான காரணம் இப்போது புரிகிறது. சுயமரியாதை முக்கியம் என்று எண்ணி உள்ளார். அந்த ஏக்கம் அவரது உள்ளத்தில் இருந்துள்ளது.

அவர் லேட்டாக வந்து சேர்ந்திருக்கிறார். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக பணியாற்றப் போகிறார். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதில் நாம் சிறப்பான வெற்றியைப் பெறப் போகிறோம். இன்று இணைந்திருக்கிற அனைவரையும் வரவேற்கிறேன். வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தீவிரமாகப் பணியாற்றுவோம் என உறுதியேற்போம். வெல்வோம் 200, படைப்போம் வரலாறு" எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்

பாபநாசம் இன்பம்