தவெக கூட்டத்தில் பரபரத்து ஓடிய ஆம்புலன்ஸ்கள், தடுத்து நிறுத்தி சோதனை செய்த போலீசார் ஷாக். !

நாமக்கல்

தவெக கூட்டத்தில் பரபரத்து ஓடிய ஆம்புலன்ஸ்கள், தடுத்து நிறுத்தி சோதனை செய்த போலீசார் ஷாக். !

நாமக்கல்லில் தொண்டர்களுக்கு நடுவே சைரன் எழுப்பியபடி ஆம்புலன்ஸ்கள் வரிசையாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாரந்தோறும் சனிக்கிழமையன்று பிரச்சாரம் செய்து வருகிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.

அதன்படி நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் மற்றும் கரூர் வேலுச்சாமிபுரத்தில் இன்று (செப்டம்பர் 27) அவர் பரப்புரை மேற்கொள்ள போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.

நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் பகுதியில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தனி விமானம் மூலம் விஜய் வர தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாமக்கலில் நண்பகல் 12 மணி அளவில் தான் அவர் பிரச்சாரம் செய்ய முடியும் என்கின்றனர் தவெகவினர்.

இதற்கிடையே இன்று காலை முதலே தவெக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து விஜய்யின் வருகைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்காக தண்ணீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை தவெக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொண்டர்கள் கூட்டத்திற்கிடையே சாலையில் தவெக கொடி பொருத்திய 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரிசையாக அங்குமிங்கும் அபாய ஒலியை எழுப்பியபடி சென்று வந்தது.

இதனை கவனித்த போலீசார், அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்த பெட்டுக்கு கீழே தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே இருந்த நிலையில், 'இதனை வைத்துக்கொண்டு தான் சர்ரு புருனு ஓட்டிட்டு இருக்கியா?' என கேட்டு, அப்பகுதியில் இருந்து செல்லும்படி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.