தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம், நாளை 3 மணி நேரம் டாஸ்மாக் இயங்காது. !

Tasmac

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம், நாளை 3 மணி நேரம் டாஸ்மாக் இயங்காது. !

பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு நாளை 3 மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

நாளை பிப்ரவரி 9ம் தேதி திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 3 மணி நேரம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் ) மதுக்கடைகள் இயங்காது.

கடந்த 5 நாட்களாகச் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு பணியாளர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது முதன்மையான கோரிக்கைகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பூதிய முறையை ஒழித்துக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பணி ஓய்வு பெறுபவர்களுக்கு முறையான ஓய்வூதியச் சலுகைகளை உறுதி செய்ய வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, அரசுத் துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தல்.

கடந்த பிப்ரவரி 5ம் தேதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படாததால், அடுத்தகட்டமாக நாளை (திங்கட்கிழமை) 3 மணி நேரக் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும், மதுக்கடைகள் தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான மாற்று ஏற்பாடுகள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இருப்பினும், 16-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை நடத்துவதால், நாளை மதிய வேளையில் மது விற்பனை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.