RAC தொல்லை இல்லை.. இனி புக் செய்தாலே கன்பார்ம் டிக்கெட்! ரயில் டிக்கெட்களில் வரும் மிக பெரிய மாற்றம் .!

இந்திய இரயில்வே

RAC தொல்லை இல்லை.. இனி புக் செய்தாலே கன்பார்ம் டிக்கெட்! ரயில் டிக்கெட்களில் வரும் மிக பெரிய மாற்றம் .!

டெல்லி: இந்திய ரயில்வே பல புதிய ரயில்களை வரிசையாக அறிமுகப்படுத்தும் நிலையில், இந்த மாதம் அமிர்த பாரத் 2.0 ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமிர்த பாரத் ரயில்களில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன மாதிரியான மாற்றம்.. இதனால் யாருக்கு நன்மை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்திய ரயில்வே தொடர்ச்சியாகப் பல புதிய ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த மாதம் பல புதிய ரூட்களில் புதிய அமிர்த பாரத் 2.0 ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே இந்த ரயில்களுக்கான பயணக் கட்டண அமைப்பு மற்றும் புக்கிங் விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

டிக்கெட் ரேட் உயரும்

புதிய விதிகளின்படி, அடிப்படை பயணக் கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. ஆனால், குறைந்தபட்சப் பயணத் தூரத்திற்கான விதிகளில் சில முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளன. படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் குறைந்தபட்சம் 200 கி.மீ. தூரத்திற்கான கட்டணமாக ரூ.149 செலுத்த வேண்டும். இரண்டாம் வகுப்புப் பெட்டிக்கு குறைந்தபட்சம் 50 கி.மீ.க்கான கட்டணமாக ரூ.36 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர முன்பதிவுக் கட்டணம் மற்றும் சூப்பர் பாஸ்ட் கட்டணங்கள் தனியாக வசூலிக்கப்படும்.

அதாவது ஒரு பயணி 100 கி.மீ. மட்டுமே பயணம் செய்தாலும் கூட, படுக்கை வசதிப் பெட்டியில் 200 கி.மீ. தூரத்திற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல ஒருவர் 2ம் வகுப்பு பெட்டியில் 20 கிமீ பயணத்தாலும் கூட அவர் 50 கிமீ பயணம் செய்ததற்கான கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் குறுகிய தூரம் செல்வோருக்கான கட்டணம் சற்றே உயரலாம்.

ஆர்ஏசி இல்லை

மேலும், அமிர்த பாரத் II எக்ஸ்பிரஸின் படுக்கை வசதிப் பெட்டிகளின் புக்கிங்கில் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ஆர்ஏசி (RAC - Reservation Against Cancellation) டிக்கெட்டுகள் இனி இருக்காது. முன்பதிவு சமயத்தில் அனைத்து புக்கிங்கிலும் கன்பார்ம் செய்யப்பட்ட படுக்கைகள் ஒதுக்கப்படும். டிக்கெட்கள் முடிந்தவுடன் நேரடியாகக் காத்திருப்பு பட்டியலுக்குப் போகும். இடையில் ஆர்ஏசி இருக்காது.

பொதுவாக ஆர்ஏசி டிக்கெட்கள் இருந்தால் ஒருவர் ரயிலில் பயணிக்கலாம். ஆனால், அவர்களுக்கு முழு பெர்த் கிடைக்காது. ஆர்ஏசி டிக்கெட் இருக்கும்போது ஒரே பெர்த்தில் இரண்டு பேர் அமர்ந்து பயணிக்க வேண்டி இருக்கும். கன்பார்ம் பயணிகள் யாராவது ரத்து செய்தால் மட்டுமே RAC பயணிகளுக்கு பெர்த் கிடைக்கும். இல்லையென்றால் இரவு முழுக்க அமர்ந்தபடியே பயணிக்க வேண்டி இருக்கும்.

முக்கிய மாற்றம்

முழு கட்டணம் செலுத்திய பிறகும் ஏன் அமர்ந்து கொண்டே செல்ல வேண்டும். இந்த ஆர்ஏசி முறையில் லாஜிக்கே இல்லை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். கன்பார்ம் செய்த டிக்கெட்கள் இல்லையென்றால் காத்திருப்பு பட்டியல் என மாற்ற வேண்டும். இடையில் ஆர்ஏசி இருக்கக்கூடாது என்ற விமர்சனங்களும் சமீபத்திய நாட்களில் அதிகரித்தன. அதைத் தொடர்ந்தே இந்த மாற்றம் வந்துள்ளது. இதற்கு வரவேற்பு இருந்தால் இதே நடைமுறை மெல்ல மற்ற ரயில்களிலும் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.

மேலும், பொதுவாக ரயில்களில் சில சிறப்பு ஒதுக்கீடுகள் இருக்கும். புதிய அமிர்த பாரத் ரயில்களில் 3 சிறப்பு ஒதுக்கீடுகள் மட்டுமே இருக்குமாம். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஒதுக்கீடு மட்டுமே இருக்கும். இந்த ரயிலில் மற்ற சிறப்பு ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

லோவர் பெர்த் ரூல்ஸ்

மூத்த குடிமக்களுக்கும், குழந்தைகளுடன் பயணிப்பவர்களுக்கும் கீழ் படுக்கைகள் ஒதுக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் லோவர் பெர்த் வழங்க முன்னுரிமை தரப்படும். அதேநேரம் இந்தப் பிரிவினருக்கு நிச்சயம் லோவர் பெர்த் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. புக் செய்யும்போது இந்த வகை சீட்கள் இருந்தால் அவர்களுக்குக் கிடைக்கும். இல்லையென்றால் தானியங்கி முறையிலேயே கிடைக்கும்.

அதேபோல இப்போது ரத்து செய்யப்படும் டிக்கெட்களின் தொகை மீண்டும் வங்கிக் கணக்கில் வர 5 முதல் 7 நாட்கள் ஆகும் நிலையில், அது இந்த அமிர்த பாரத் ரயில்களில் 24 மணி நேரமாக குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.