அந்த கால கட்டங்களில் அழைக்கப்பட்ட தண்டல் நாயகம் என்றால் என்னவென்று தெரியுமா?
வரலாறு
தண்டல் நாயகம் என்றால்
என்ன ?
1958 ல் கிருட்டினகிரியும், தருமபுரியும், சேலம் மாவட்டத்தில் இணைந்திருந்த காலம். அது தொடர்பான ஒரு கல்வெட்டை பொங்கல் திருநாளில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் பயணத்தின்போது தண்டல் நாயகம் என பெயர் பொறித்த பெயர் பலகையை காணநேர்ந்தது.
தருமபுரி, கிருட்டினகிரி மாவட்ட எல்லையில் வெள்ளிச்சந்தை அருகேயுள்ள கருக்கனஹள்ளி கிராமத்தின் வழியாக வரலாற்று ஆய்வு பயணம் செல்லும்போது ஊரின் மத்தியில் அமைந்துள்ளது கம்பீரமாக காட்சியளிக்கிறது ஓர் சமுதாயக்கூட கட்டிடம். அந்த கட்டிடத்தின் மேலே N E S (NATIONAL EXTENSION SERVICE) காந்தி மனமகிழ் மன்றம் 1958, என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
சமுதாயக்கூட கட்டிடத்தின் வாயிலில் ஓர் பெயர் பலகை பொறிக்கப்பட்டுள்ளது. அதில் கட்டிட திறப்பாளர் சேலம் மாவட்ட தண்டல் நாயகம் (மாவட்ட ஆட்சியர்) சுதந்திரத்துக்கு பின் 11 வது ஆட்சியர் ம.க. பாலசுப்பிரமணியம் அவர்களால் 14.04.1958 ஆம் தேதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய நேர்ந்தது.
அதில் காணப்பட்ட தண்டல் நாயகம் என்பது இப்போது மாவட்ட ஆட்சியர் என அழைக்கபட்டாலும், பெயர் காரணம் குறித்த விவரம் அறிந்து கொள்ள பெயர் பலகையில் பொறிக்கப்பட்டிருந்த கட்டிடக்குழு தலைவர் நஞ்சுண்ட கவுண்டர் குடும்பத்தினரை சந்தித்து மேலும் விபரங்களை கேட்டறிந்தனர் ஆய்வுக் குழுவினர்.
நஞ்சுண்ட கவுண்டரின் மகன் நடராஜன் அவர்களை சந்தித்து, அவரது தாத்தா பற்றி கேட்டபோது.

நடராஜன் கூறியதாவது :
எனது தாத்தா உருவத்திலும் சரி, வாழ்ந்த வாழ்க்கையிலும் காந்தி போன்றே வாழ்ந்து வந்துள்ளார்.
ஊர் மக்கள் எங்கள் தாத்தாவை காந்தி என்றே அன்போடு அழைத்து வந்ததாக கூறினார்.
எங்கள் தாத்தா நஞ்சுண்ட கவுண்டர் அவர்கள் பூமி தான இயக்கத்துக்கு அரை ஏக்கர் நிலமும், பள்ளிக்கு நிலமும் கொடுத்துள்ளதாக தெரிவித்தார் நடராஜன்
நஞ்சுண்ட கவுண்டர் வீட்டிற்கு வந்து செல்பவர்களுக்கு கண்டிப்பாக உணவு அளிக்கப்பட்டு வந்ததையும், ஊர் மக்கள் கூறினர்.
வீட்டிற்கு சென்ற ஆய்வுக் குழுவினருக்கு வீட்டில் இருந்தவர்கள் குழுவினர் அனைவருக்கும் அன்போடு இனிப்பு வழங்கி உபசரித்தனர்.
இதற்காக கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
மாருதி மனோ
