தீபாவளியை முன்னிட்டு இரயில் நிலையங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் படையெடுப்பு. !

திருப்பூர்

தீபாவளியை முன்னிட்டு இரயில் நிலையங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் படையெடுப்பு. !

திருப்பூர்: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் குவிந்ததால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது.

அங்குள்ள நிலையை பார்க்கும் போது, கோவை அல்லது திருப்பூரில் இருந்தே தனி ரயில் இயக்கலாம் என்கிற அளவிற்கு இருக்கிறது. திருப்பூரில் இருந்து வட மாநிலம் செல்லும் ரயில்களில் அதிகப்படியான கூட்டம் ஏறுவதால் ரயில்வே நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்

தீபாவளி திங்கள் அன்று தமிழ்நாட்டில் கொண்டாடப்பட உள்ள நிலையில், வட மாநிலங்களில் இது நான்கு நாட்கள் பண்டிகையாகும். ஞாயிறுமுதலே கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிடும். செவ்வாய்கிழமை தான் முக்கியமான பண்டிகையாகும். அதாவது வடமாநிலங்களில் ரியல் தீபாவளி கொண்டாட்டம் என்பது செவ்வாய்கிழமை தான்.. செவ்வாய்கிழமை தீபாவளி என்றாலும், குறைந்தத இரண்டு நாட்கள் பயணித்து சென்றால் தான், சொந்த ஊரே போக முடியும். எனவே வடமாநிலத்தவர்கள் பலர் தமிழ்நாட்டில் இருந்து தீபாவளியை கொண்டாட சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகரில் அதிக அளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்களில் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தொழிலாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

கேரளா எர்ணாகுளத்தில் இருந்து கோவை, திருப்பூர், சேலம் வழியாக டாட்டா நகர் வரை செல்லும் ரயிலில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது அதேபோல் கேரள மாநிலம் அலப்பியில் இருந்து கோவை, திருப்பூர், சென்னை வழியாக ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் ரயிலில் செல்வதற்காக அதிக அளவிலான வட மாநிலத் தொழிலாளர்கள் வந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓபன் டிக்கெட் எடுத்துவிட்டு முன்பதிவு பெட்டியில் கூட்டம் ஏறியதால் அதன் வீடியோ வைரலைத் தொடர்ந்து திருப்பூர் ரயில்வே நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பத்துக்கும் மேற்பட்ட டிக்கெட் பரிசோதகர்களும் பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதித்து அவர்களை அனுப்பி வைதனர்.தொடர்ந்து யாரையும் முன்பதிவு பெட்டியில் ஏறாமல் பார்த்துக் கொண்டனர்.

ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு மேற்கொண்டும் மற்றும் மோப்ப நாயுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தீபாவளி வரை இந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளது.