எச்.ராஜாவுக்கு பக்கவாதம்.. இப்போ உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை. !
சென்னை
சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று ஊடக விவாத நிகழ்ச்சி ஒன்றின்போது மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் எச். ராஜாவின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சென்னையில், தனியார் தொலைக்காட்சி சார்பில் நேற்றும், இன்றும் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பங்கேற்றிருந்தார். அப்போது, திடீரென அங்கு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. விவாதத்தின் போது எச். ராஜா திடீரென மயங்கி விழுந்தார். அவர் கீழே விழப்போன நிலையில் மேடையில் இருந்தவர்கள் அவரை சுதாரித்துப் பிடித்தனர். சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாக கருதப்பட்டு அவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அதே நிகழ்வு அரங்கில் இருந்த பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜாவின் உடல்நிலையை பரிசோதனை செய்து, அதிக ரத்த அழுத்தத்தால் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கூறினார். எச்.ராஜாவால் நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை.
மூளை பக்கவாதம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதால், உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி கொடுத்தனர். MRI மற்றும் CT ஸ்கேன்களை எடுத்தனர். பின்னர் அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
