கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதனீர் சீசன் துவக்கம்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதனீர் சீசன் துவக்கம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதனீர் சீசன் துவக்கம். மருத்துவ குணமுடைய பதனீரை மதிப்பூட்டும் பொருளாக மாற்றி, சுதந்திரமாக பதனீர் எடுக்க உரிய அனுமதியளித்து பனைமரத் தொழிலாளிகளின் வாழ்வாதரத்தினை உயர்த்த, தமிழகஅரசு முன்வரவேண்டும் என பனைமரத் தொழிலாளிகள் கோரிக்கை.  இது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.

தமிழர்களின் அடையாளமாகவும்,  தமிழக தேசிய மரமாக விளங்கும் இந்த பனைமரங்கள் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பனை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கு இரையாகி வருகிறது.
மக்கள் மத்தியில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மறந்து வரும் இந்த பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதனீரில் இருந்து, பனை வெல்லம் தயாரிக்கப்பட்டு, உடல் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய மருத்துவ குணம் கொண்ட பனைமரங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரை மத்தூர், போச்சம்பள்ளி, சிங்காரப்பேட்டை, ஆம்பள்ளி என பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளது, இந்தப் பனை மரங்களை நம்பி ஆயிரக்கணக்கான பனை மரத்தொழிலாளிகள் உள்ளனர்.

தற்போது இந்த பனை மரங்களில் இருந்து பதனீர் எடுக்கும் பணிகளில், பனை மரத்தொழிலாளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதனீரை, பனை மரத் தொழிலாளிகள்  சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலையில் செல்லும் நபர்கள் மற்றும் கார்களில் நெடும் தூரம் செல்லும் மக்கள், இயற்கையாக கிடைக்கும் பதனீரை குடிப்பதோடு, வாங்கி செல்வதிலும் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட பதனீர் மற்றும் பனைப்பொருள்கள் கூட்டுறவு  சங்கத்தலைவர் சுப்பிரமணி  கூறுகையில்.....

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரை பகுதியில்  மிக அதிக அளவில் பனை மரங்கள் இருந்தன. காலப்போக்கில் பெரும்பாலான பனை மரங்கள் வெட்டி அழித்து, செங்கல் சூளைகளுக்கு அனுப்பட்டதால், பனை மரங்களை நம்பி இருந்த பனைமரத்தொழிலாளிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இருக்கின்ற பனை மரங்களையாவது பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், இன்றைய தலைமுறையினருக்கு பனை மரத்தின் பயன்பாடுகள் குறித்து தெரிய வேண்டும் என்பதற்காகவும், பனைமரங்களை பாதுகாத்து வருகிறோம். தற்போது பனை மரத்தில் இருந்து பதனீர் எடுக்கும் சீசன் துவங்கி உள்ளது. 

பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதனீரை, சாலையோரங்களில் வைத்து லிட்டர் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மருத்துவ குணமுடைய  இந்த பதனீரை மதிப்பூட்டும் பொருளாக மாற்றி, ஏற்றுமதி செய்து, பனைமரத் தொழிலாளிகளின் வாழ்வாரத்தினை ஊக்குவிப்பதோடு, பனை மரங்களை அழிவில் இருந்து காப்பற்ற முடியும். 

குறிப்பாக பனை மரத்தில் இருந்து பதனீர் எடுக்க உரிய அனுமதி இருந்தும் காவல் துறையினரின் கெடுபிடியால் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. ஆகையால் மருத்துவ குணம் கொண்ட பதனீரை சுதந்திரமாக விற்பனை செய்ய அனுமதி அளித்தால் சரிவில் இருந்து பனை மரத் தொழிலை காப்பாற்றி கற்பக விருட்சமாக விளங்கும் பனை மரங்கள் அழிவில் இருந்து காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டனர். மேலும் பதனீரை மதிப்பூட்டும் பொருளாக மாற்றி, ஏற்றுமதி செய்து, பனை மரத்தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்த, தமிழகஅரசு முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ