டெல்லி காங்கிரஸ் கூட்டம் முடிந்தவுடனே.. மாணிக்கம் தாகூர் பதிவால் கடுப்பான திமுக.!

காங்கிரஸ் Vs திமுக

டெல்லி காங்கிரஸ் கூட்டம் முடிந்தவுடனே.. மாணிக்கம் தாகூர் பதிவால் கடுப்பான திமுக.!

சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கடந்த சில வாரங்களாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இரண்டு கட்சி தலைமையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெல்லி நேற்று ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. திமுகவுடன் கூட்டணி என்றும், இதன் பிறகு கூட்டணி குறித்து பொதுவெளியில் விமர்சிக்க கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று காலையே தன் எக்ஸ் பக்கத்தில் திமுகவை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், டெல்லி காங்கிரஸ் கூட்டம் தொடர்பான வெளியாகியுள்ள செய்திக்கு மறுப்பும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்கின்றன. தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி

அதிமுக தேர்தல் வாக்குறுதிகளையே அறிவித்துவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல திமுக கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

முக்கியமாக திமுக - காங்கிரஸ் இடையே சமீபகாலமாக பஞ்சாயத்துகள் வெடித்து கொண்டிருக்கிறது. தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சிலரும், ஆட்சி அதிகாரத்தில் பங்குவேண்டும் என்றும் காங்கிரஸில் சிலர் கூறி வருகிறார்கள். இதனால் திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே விவாதம் ஏற்பட்டு வருகிறது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் நீலகிரி மாவட்டம், கூடலூர் வந்தார்.

காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முக்கியமாக கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தவெக மற்றும் விஜய்யை புகழ்ந்து வரும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். அனைவரிடமும் தனித்தனியாகவும் ஆலோசித்த காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுக மீது விமர்சனம்

கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது, அகில இந்திய தலைமை தான் கூட்டணி குறித்து முடிவு செய்யும் என்று கூறியுள்ளனர். மேலும் திமுகவுடன் கூட்டணி என்பதையே பெரும்பாலான நிர்வாகிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.

பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், "திமுகவுடன் கூட்டணி வைக்கவே காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். பெரும்பான்மை பெறாத பட்சத்தில்தான் அதுகுறித்து முடிவு செய்யப்படும்" என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தி அவர்களின் சமூக ஊடக பக்கங்களிலும் வெளியாகியிருந்தது.

அதிர்ச்சி பரபரப்பு

அதை தன் எக்ஸ் பக்கத்தில் ரீபோஸ்ட் செய்துள்ள மாணிக்கம் தாகூர், "இந்த செய்தி முழுவதும் கற்பனையானது. உண்மையில் இதிலிருந்து பல கிமீ தொலைவில் உள்ளது" என கூறியுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் திமுக ஐடி விங்கையும் விமர்சித்துள்ளார். அதில், "#இந்த அல்றசில்றIT Wing பாவம். நலம் பெற வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார். மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை சீண்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.