திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் இன்று(14.11.2024) கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்க திருத்தம் 2025-ஐ முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு (7) சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2025-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் 29.10.2024 முதல் நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் (31.12.2006-ஆம் தேதி வரை பிறந்தவர்கள்) சேர்ப்பதற்கு படிவம் – 6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம்-7, பிழைத்திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற படிவம் – 8, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை சேர்க்க படிவம் 6 பி ஆகிய படிவங்களில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் 16.11.2024(சனிக்கிழமை), 17.11.2024(ஞாயிற்றுக்கிழமை), 23.11.2024(சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. வாக்காளர்கள் விண்ணப்பத்தினை தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேரில் வழங்கி பயன்பெறலாம்.
வாக்காளர் பட்டியலில் தகுதியான நபர்கள் பெயர் சேர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றையதினம் கல்லுாரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு முகாம் மேற்கொள்ளப்படுகிறது. மாணவ, மாணவிகள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதுடன், தங்கள் பகுதியில் வசிக்கும் தகுதியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், சிறப்பு முகாம்கள் நடைபெறுவது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், வாக்காளர் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர். அதன்படி, “மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும், நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கும் ஆட்படாமலும் அல்லது எந்தவொரு துாண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதிமொழிகிறோம்“ என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல்(மேற்கு) வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், ஆத்துார் வட்டாட்சியர் முத்துமுருகன், எஸ்.எஸ்.எம். பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரி முதல்வர் செந்தில்குமரன், எஸ்.எஸ்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் டாக்டர் சம்பத்குமார், தேர்தல் வட்டாட்சியர் முத்துராமன், மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அழகர் சாமி