ஆசையே ஆன்லைன் மோசடிக்கு காரணம்; மெத்தப்படித்த மருத்துவர் இழந்தது ரூ.76 லட்சம்!
சென்னையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பணம் கொட்டும் என்ற பேச்சை நம்பி மருத்துவர் ஒருவர் ரூ.76 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான விளம்பரங்கள், அறிவிப்புகள் நாள்தோறும் குவிந்து வருகின்றன. இந்த அறிவிப்புகளில் குறிப்பிட்டு உள்ள வாக்குறுதிகள் எந்தளவுக்கு உண்மை என்பதில் இன்னமும் ஏராளமான சந்தேகங்கள் இருந்தாலும் அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை என்னவோ குறையவில்லை.
.அண்மையில், சென்னையில் அரசு மருத்துவர் ஒருவர் இப்படியான ஆன்லைன் வர்த்தகத்தை நம்பி ரூ.76 லட்சத்தை தொலைத்திருக்கிறார். இதுபற்றிய விவரம் வருமாறு; சென்னையில் பிரபல அரசு மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கணேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). யுடியூப் ஒன்றில் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான பயிற்சி வகுப்புகள், ஆலோசனைகள் நடத்தப்படுவதாக விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார்.
தொடக்கத்தில் அதை அலட்சியப்படுத்திய அவர், பின்னாளில் ஒரு வித ஆர்வத்துடன் அந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார்.தினமும் புதுப்புது தகவல்கள் என்று கூறி அவருக்கு யுடியூப் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள மருத்துவரின் செல்போன் எண்ணை, வாட்ஸ் அப் குழு ஒன்றில் உறுப்பினராக அதன் அட்மின் திவாகர் சிங் என்ற பெயரில் உள்ளவர் சேர்த்துள்ளார். அந்த குழுவில் இடம்பெற்று உள்ள பலரும் பெரிய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் என வசதி படைத்தவர்களாக இருப்பதாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளனர்.பயிற்சியில் சேர்ந்த தொடக்க நாட்களில் ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன, அதில் முதலீடு எப்படி செய்வது, எந்த பங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிட்டும் என்று அடிப்படையான விஷயங்கள் பாடங்களாக சொல்லிக் கொடுக்கப்பட்டு உள்ளது. பயிற்சி விவரங்கள் வாட்ஸ் அப்பில் குறிப்பிடப்படும் போது, அதில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ள பலரும், நாங்கள் முதலீடு செய்தோம், ஏராளமான பணம் வருமானமாக கிடைத்ததாக கூறி உள்ளனர்.
வாட்ஸ் அப் குழுவில் இருந்ததால் மருத்துவரும் அந்த தகவல்களை தொடர்ச்சியாக கவனித்துக் கொண்டே வந்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம் என்ற உந்துதலுக்கு மருத்துவர் வந்துள்ளதை மோப்பம் பிடித்த பயிற்றுநர்கள், பணத்தை டெபாசிட் செய்யுமாறு கூறி உள்ளனர். அவ்வாறு செய்தால் 30 சதவீதம் கூடுதல் வருமானத்துடன் லட்சக்கணக்கில் லாபம் வந்து சேரும் என்று ஆசை வார்த்தையும் கூறி இருக்கின்றனர்.
கோடியில் பணம் கொட்டும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பிய மருத்துவரும் அக்டோபர் மாதத்தின் முதல் 3 வாரங்களில் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பணம் கட்டி வந்துள்ளார். அக்டோபர் 22ம் தேதி முதலீட்டு தொகைக்கான லாபத்தை (கிட்டத்தட்ட ரூ.50 லட்சம்) தமது கணக்கில் இருந்து எடுக்கலாம் என்று மருத்துவர் முயற்சித்தபோது, பலனளிக்கவில்லை.
சந்தேகம் அடைந்த மருத்துவர் 0 க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் தான் இதுவரை 76 லட்சம் பணத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆன் லைன் மோசடி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.