திருவண்ணாமலை கோவிலில் ஒன்றாக சாமி தரிசனம் செய்த இயக்குநர் பாலா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.!
திருவண்ணாமலை
சென்னை: இயக்குநர் பாலா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
புத்தாண்டு நாளில் இருவரும் இணைந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இது புதிய பட திட்டத்திற்கான பூஜையாகவோ அல்லது தனிப்பட்ட யாத்திரையாகவோ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. இவரது படம் வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டிருக்கும். நடிகர் விக்ரமை வைத்து சேது படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, நடிகர் விக்ரமிற்கும் அவரது திரை பயணத்தின் முக்கிய படமாக மாறியது.
இயக்குநர் பாலா, சூர்யாவை வைத்து நந்தா, பிதாமகன், ஆர்யாவை வைத்து நான் கடவுள் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். நான் கடவுள் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். இதன் மூலம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார். இவர் இதுவரை 10 படங்களை இயக்கி உள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் வனங்கான் படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியானது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2023 ஆம் ஆண்டு லால் சலாம் திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் அடுத்த பட வேலைகளில் பிசியாக உள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் தங்கள் திருமண வாழ்வில் இருந்து பிரிந்து விட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க இரு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு கடந்த ஆண்டு விவாகரத்து வழங்கப்பட்டது.
தனுஷ் தனது பட விழாக்களுக்கு மகன்களை அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோல ஐஸ்வர்யாவும் மகன்களை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றார். தங்கள் மகன் யாத்ராவின் பள்ளி பட்டமளிப்பு விழாவுக்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
