வரி விதிப்பை தடை செய்தால் அமெரிக்கா பொருளாதாரத்தில் படுத்து விடும், நீதிமன்றத்தில் புலம்பிய டிரம்ப். !

அமெரிக்கா

வரி விதிப்பை தடை செய்தால் அமெரிக்கா பொருளாதாரத்தில் படுத்து விடும், நீதிமன்றத்தில் புலம்பிய டிரம்ப். !

வாஷிங்டன்: இந்தியா, பிரேசில் உட்பட மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா போட்டிருக்கும் வரி சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நீதிமன்றம் வரிகளுக்கு தடை விதித்தால் அமெரிக்க பொருளாதாரம் படுத்துவிடும் என டிரம்ப் கூறியுள்ளார்.

நீதிமன்றம் வரிகளுக்கு எதிராகத் தீர்ப்பளித்தால், '1929 பெரும் மந்தநிலை' மீண்டும் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த வரிகளால் பாதிக்கப்பட்ட சில நிறுவனங்கள் மற்றும் மாநிலங்கள் தொடர்ந்த வழக்குகள் தற்போது அமெரிக்காவின் கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், "இந்த வரிகளால் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் சாதகமான விளைவுகளைப் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களை எட்டுகிறது. மேலும், பில்லியன் கணக்கான டாலர்கள் நம் நாட்டின் கருவூலத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தி, வருமான வரிக்கு ஒரு மாற்றாகவும் அமையும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வரிகளை ஆதரித்துப் பேசிய டிரம்ப், "இந்த முக்கியமான தருணத்தில், அமெரிக்கா இதுவரை கண்டிராத மிகப் பெரிய பணவரவு, செல்வம் உருவாக்கம் மற்றும் பலத்தை ஒரு தீவிர இடதுசாரி நீதிமன்றம் குறைக்கும் அல்லது சீர்குலைக்கும் வகையில் நமக்கு எதிராகத் தீர்ப்பளித்தால், இந்த மிகப் பெரிய தொகைகளை நம்மால் திரும்பப் பெற முடியாது" என்று தெரிவித்தார்.

நீதிமன்றம் "அமெரிக்காவின் செல்வம், வலிமை மற்றும் அதிகாரத்திற்கு" எதிராகத் தீர்ப்பளித்தால், "இது மீண்டும் 1929 போல, ஒரு பெரும் மந்தநிலையாக இருக்கும்!" என்று டிரம்ப் எச்சரித்தார். அமெரிக்காவுக்கு "இந்த வகையான பெருமை" மீண்டும் கிடைக்காமல் போகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டிரம்ப், "நம் நாட்டிற்கு வெற்றி மற்றும் பெருமை தேவை, குழப்பம், தோல்வி மற்றும் அவமானம் அல்ல. கடவுள் அமெரிக்காவைப் பாதுகாப்பார்!" என்று தனது சோஷியல் மீடியாவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கு, ஏப்ரல் மாதம் டிரம்ப் பல அமெரிக்க வர்த்தக பங்காளி நாடுகளின் மீதும், பிப்ரவரியில் சீனா, கனடா மற்றும் மெக்சிகோ மீதும் விதித்த வரிகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அவசரகால சூழ்நிலைகளில் "அசாதாரண மற்றும் குறிப்பிடத்தக்க" அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அதிபர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) குறித்த டிரம்பின் செயல்பாட்டை இந்த வழக்கு மையப்படுத்துகிறது. இந்த வழக்கில் டிரம்ப் தோல்வியடைந்தால், வியாழக்கிழமை அவர் வெளியிட்ட சமீபத்திய வரிகள் பாதிக்கப்படும். இருப்பினும், தோல்வியடைந்த தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் இந்தியா மீது 50% வரி விதித்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதே இதற்கு காரணம் என்று டிரமப் கூறியுளுளார். புதன்கிழமை அன்று அறிவிக்கப்பட்ட 25% வரி விதிப்புடன், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த அதே அளவிலான வரிகளும் சேர்க்கப்பட்டு, இந்திய இறக்குமதிகள் மீது வாஷிங்டன் விதித்த மிக உயர்ந்த வரி விகிதமாக இது மாறியுள்ளது.