புஷ்பா 2 திரைப்பட கூட்ட நெரிசல் வழக்கில் அல்லு அர்ஜுன் 11 வது குற்றவாளியாக சேர்ப்பு. !
புஷ்பா 2
ஹைதராபாத்தில் 'புஷ்பா 2' படம் பார்க்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜூன் 11 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் புஷ்பா-2 திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியானது. அதற்கு முதல் நாள் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
ரசிகர்களுடன் படம் பார்க்க, அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வந்தபோது அவரை காண கூட்டம் முண்டியடித்தது. அப்போது ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூன் கைதுசெய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நம்பள்ளி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், புஷ்பா 2 கூட்ட நெரிசல் வழக்கில் சிக்கடப்பள்ளி காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், சந்தியா திரையரங்க நிர்வாகம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று அல்லு அர்ஜூன், 8 பவுன்சர்கள் உட்பட 23 பேர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
