பைசன் திரைப்படத்தில் வெங்கடேச பண்ணையாரின் கதை அடங்கியுள்ளது.! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நடத்தப்பட்ட என்கவுண்டர். !
Bison
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது. டீசன்டான வசூலை பதிவு செய்துள்ளது.
இந்த திரைப்படத்தில் வரும் கந்தசாமி எனும் கேரக்டர், நிஜ உலகில் என்கவுண்டர் செய்யப்பட்ட வெங்கடேச பண்ணையாரை நினைவுபடுத்துகிறது.
திரைப்படத்தில் இரண்டு சமூகத்தை சேர்ந்த பெரிய கைகள், சண்டையிட்டுக் கொள்ளும். அதனால் ஏற்படும் சமூக தாக்கம் கதாநாயகனை பாதிக்கும். என்னதான் மாரிசெல்வராஜ், படத்தின் ஆரம்பத்தில் இது நிஜமல்ல என்று கார்டு போட்டுக்கொண்டாலும், இது நிஜமான சம்பவத்தை ஒட்டி நடப்பதாக ரசிகர்களால் புரிந்துகொள்ளப்படுகிறது.
திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கந்தசாமி மற்றும் பாண்டியராஜா கேரக்டர்கள் நிஜத்தில் வாழ்ந்த வெங்கடேச பண்ணையார் மற்றும் பசுபதி பாண்டியன் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது.
யார் இந்த வெங்கடேச பண்ணையார்?
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர்தான் இந்தை வெங்கடேச பண்ணையார். பண்ணையார் என்கிற பெயருக்கு ஏற்றார்போல, இவருக்கு சுமார் 1500 ஏக்கர் அளவுக்கு நிலம் இருந்தது. இங்கு பெரும்பாலும் விவசாய கூலிகளாக ஒடுக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர் மக்கள் இருந்தனர். அந்த காலத்தில் விவசாய கூலிகளுக்கு போதுமான கூலி கிடைக்கவில்லை. பண்ணையார் நிலத்தில் வேலை பார்த்தவர்களுக்கும் இதே கதிதான்.
தனிப்பட்ட மோதல்கள்
எனவே கூலி உயர்வு, அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதேபோல ஒரு வாய்க்கால் தகராறும் தேவேந்திர குல வேளாளர்கள் மக்களுக்கும், பண்ணையார் குடும்பத்திற்கும் பிரச்சினையாக மாறியது. இந்த புள்ளியில்தான் பசுபதி பாண்டியன் உள்ளே நுழைகிறார். இவர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் தலைவராக இருந்தார். இறுதியில் பசுபதி பாண்டியன் வெங்கடேச பண்ணையார் குடும்பத்தில் பெரியவர்கள் இருவரை அடுத்தடுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெங்கடேச பண்ணையார் மற்றும் பசுபதி பாண்டியன் இடையேயான மோதலாக இது வெடித்தது. இருவருக்கும் இடையேயான மோதல்கள் இரு சமூகத்திற்கும் இடையேயான மோதலாக வெடித்தது.
சென்னையில் பண்ணையார்
வெங்கடேச பண்ணையார் அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவராகவும் இருந்தார். பஞ்சாயத்துகள் ஒருபக்கம் என்றால் சென்னையில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவரான ராதிகா செல்வியை பண்ணையார் மணமுடித்திருந்ததால் அடிக்கடி சென்னை சென்று தங்குவது வழக்கம். அப்போது சென்னையில் கட்டப்பஞ்சாயத்துகளை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
கட்டப்பஞ்சாயத்தில் பண்ணையார்
இந்த பஞ்சாயத்துகள்தான் கடைசியில் பண்ணையாருக்கு சிக்கலாக அமைந்தது. அதாவது சென்னையில் பண்ணையாருக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் இருந்தனர். அதில் முக்கியமானவர்தான் பெப்சி முரளி. வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதுதான் இவரது வேலை. ஆனால் ஜெய்கணேஷ் என்பவரிடம் பணம் கொடுத்து ஏமாந்திருந்தார் பெப்சி முரளி. எனவே இந்த பணத்தை எப்படியாவது வசூலித்து கொடுக்க வேண்டும் என்று பண்ணையாரிடம் கோரிக்கை வைக்க, பண்ணையாரும் விவரம் அறியாமல் களத்தில் இறங்கினார்.
ஜெய்கணேஷை தட்டி தூக்கிய போது அவரிடம் பணம் இல்லை. அதாவது போலியான நிறுவனத்தை நடத்தி வெளிநாட்டு கரன்சிகளை உள்ளூர் பணமாக மாற்றும் பணி மற்றும் சுங்க அதிகாரிகளிடம் சிக்கும் தங்கம் உள்ளிட்டவற்றை மீட்டு விற்பனை செய்து வருவது போன்ற பணிகளை செய்து வரும் சமீர் முகமது என்பவரிடம் ஜெய்கணேஷ் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார். எனவே அந்த பணத்தை மீட்டு அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஜெய்கணேஷ் கூற, சமீர் முகமதுவை ரவுண்டப் செய்தார் பண்ணையார்.
சதி வலையில் பண்ணையார்
ஆனால் முகமது, அப்போதைய தமிழகத்தின் ஆளுநராக இருந்த பாத்திமா பீவியின் உறவினர். எனவே, பண்ணையாரின் டார்ச்சரை ஆளுநரின் கவனத்திற்கு சமீர் கொண்டு செல்ல, ஆளுநரோ முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் கவனத்திற்கு இதை கடத்தியிருக்கிறார். இறுதியில், பண்ணையாரை என்கவுண்டர் செய்ய போலீசுக்கு ரகசிய உத்தரவு பறந்திருக்கிறது. குறிப்பாக அப்போது சென்னை கமிஷ்னராக இருந்த விஜயகுமாரிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர் தலைமையிலான டீம் பக்காவாக பிளான் போட்டு 2003ல் பண்ணையாரை என்கவுண்டர் செய்கிறது.
பண்ணைாயரின் மரணம்
என்கவுண்டர் திட்டத்தை பண்ணையார் முன்கூட்டியே அறிந்திருந்தாலும் கூட அதிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. காரணம், நெருங்கியவர்கள் உதவியை வைத்தே அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதாவது சென்னையில் அவர் பதுங்கியிருந்த வீட்டை ரவுண்ட் அப் செய்த போலீசார், பண்ணையாரின் நண்பர் பெப்சி முரளியை வைத்துதான் வீட்டிற்குள் நுழைந்தனர்.
கதவை தட்டியது பெப்சி முரளிதான். அவர் முகத்தை பார்த்துதான் கதவை பண்ணையார் திறந்தார். இதை பயன்படுத்தி போலீசார் உள்ளே நுழைந்தனர். நுழைந்தவுடன் என்கவுண்டர் நடந்தது.
பண்ணையார் துப்பாக்கியால் எங்களை தாக்க வந்தார் என்றும், எனவே என்கவுண்டர் செய்தோம் எனவும் போலீஸ் கூறியிருந்தது. மொத்த 7 குண்டுகள் உடலை துளைத்தன. 6 குண்டுகள் உடலின் மறுபுறம் வெளியேற, ஒரு குண்டு மட்டும் உடலில் சிக்கிக்கொண்டது என் பிரேத பரிசோதனை அறிக்கை கூறியது. துப்பாக்கி அவரது உடலுக்கு மிக அருகே இருந்து சுடப்பட்டதும் அம்பலமானது.
நாடார் சமூகத்தை சேர்ந்த பெரிய கை ஒன்று என்கவுண்டர் செய்யப்பட்டது தென் மாவட்டங்களில் ஜெயலலிதாவுக்கு எதிரான விமர்சனங்களாக வெடித்தது. இதை திமுக சரியாக பயன்படுத்திக்கொண்டது. அதாவது பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியை 2004 திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிற்க வைத்தது திமுக. அவர் வெற்றியும் பெற்றார். மத்திய இணையமைச்சராகவும் மாறினார். ஆனால், எவ்வளவு முயன்றும் கடைசி வரை கணவரின் மரணத்திற்கு நீதி வாங்க முடியாமல் போய்விட்டது. ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் அரசியல் பலம் இதற்கு காரணமாக கூறப்பட்டது.
என்கவுண்டர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை மனைவி நாட, நீண்ட காலம் கழித்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. பிறகு காலதாமதத்தை காரணம் காட்டியே நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நினைவுகளை பைசன் திரைப்படம் கண்முன்பாக கொண்டு வந்துள்ளது. என்கவுண்டர் காட்சிகள் நிஜத்தை போலவே இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
