எனக்கு ஒரு கையே போயிடுச்சு!" இனி எப்படி வாழ போறேன்னு தெரியல! சபேஷின் மறைவால் தேவா - முரளி துயரம் .!
சினிமா
சென்னை: தமிழ் திரையுலகில் 90களின் இறுதியில் இசையால் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் இசையமைப்பாளர் தேவா.
அவருடைய தொடர்ச்சியான வெற்றிக்குப் பின்னால், அவருடைய இரட்டைச் சகோதரர்கள் சபேஷ் மற்றும் முரளி ஆகியோரின் உழைப்பும், பாசமும் தான் இருந்தது. இந்நிலையில், இசையமைப்பாளர் சபேஷ் நேற்று (அக்டோபர் 23), உடல்நலக் குறைவால் காலமான துயரச் செய்தி, தேவாவையும், முரளியையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
தேவாவின் கண்ணீர் குரல்
மறைந்த சகோதரர் சபேஷ் குறித்து பேசிய தேவா, உணர்ச்சிப் பெருக்கில் உடைந்துபோனது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறிய வார்த்தைகள், அந்தக் கூட்டு உழைப்பின் ஆழத்தைக் காட்டுகிறது: "இன்னைக்கு நான் இசையமைப்பாளராக உங்க முன்னாடி நிக்கிறேனா, அதற்கு காரணம் என் தம்பிங்க தான். அவங்க இல்லன்னா நான் இவ்வளவு படம் பண்ணி இருக்க மாட்டேன்." 14 வருஷத்துல ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் என் தம்பி அவங்களுடைய வீட்டில் இருப்பாங்க. மற்ற நேரத்துல எல்லாரும் ஸ்டுடியோவில் தான் ஒன்னா இருப்போம். கச்சேரிக்கு கூட ஒன்னா போவோம். ஆனா இன்னைக்கு என்னோட ஒரு கையே போயிடுச்சு. இனி நான் எப்படி வாழப் போறேன்னு தெரியல" என்று தேவா பேசியது பலரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறது.
கூட்டு உழைப்பில் பிறந்த இசைக் கலைஞர்கள்
தேவா சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே, சபேஷ் கீபோர்டு கலைஞராக 1983லேயே திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஆனாலும், தன்னுடைய அண்ணனுக்காகப் பல படங்களில் பின்னணியில் வேலை பார்த்திருக்கிறார்கள். தன்னுடைய தம்பிகள் சினிமாவில் ஒன்றாக அறிமுகமாக வேண்டும் என்று தேவா தான் அவர்களைச் 'சபேஷ் - முரளி' என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய தம்பிகள் சினிமாவில் அறிமுகமானது தனக்குப் பெருமை என்றும் பல இடங்களில் அவர் சொல்லி இருக்கிறார்.
அண்ணனை பாராட்டிய தம்பிகள்
அதுபோல, தேவாவை பற்றி அவருடைய தம்பிகளான சபேஷ் மற்றும் முரளி இருவருமே பெருமையாகப் பேசி இருக்கிறார்கள். "எங்களை விட அவர் வித்தியாசமானவர்!". சகோதரர் சபேஷின் மறைவு குறித்துப் பேசிய முரளி, உடைந்துபோன அந்தக் குடும்பத்தின் வலியைப் பதிவு செய்தார்.
"என்னுடைய அண்ணன் தேவா அவர்களின் ஆசியால்தான் நாங்கள் இன்று இந்த அளவிற்கு உயர்ந்தோம். ஆனால் எங்கள் மூன்று பேரிலும் சபேஷ் அண்ணா ரொம்பவும் வித்தியாசமானவர். அவர் எந்த வேலையிலும் மிகவும் ஆர்வத்தோடு செய்பவர், எல்லாவற்றிலும் போட்டியாகச் செயல்படுவார். இதை நான் பொறாமையாக சொல்லவில்லை, பெருமையாகச் சொல்கிறேன்" என்று முரளி கூறினார். "எங்க குடும்பத்தில் முதல் பைக் வாங்கியது சபேஷ் அண்ணா தான். கார் வாங்கியதும் அவர்தான். முதலில் வீடு கட்டியதும் அவர்தான். அதற்குப் பிறகுதான் நானும் தேவா அண்ணனும் எல்லாமே வாங்கி இருக்கிறோம். ஆனால் இன்று எங்கள் அனைவரையும் விட முதலில் அவர் உலகத்தை விட்டுப் போய்விட்டார்" என்று பேசிக் கொண்டிருக்கும்போதே முரளி அழுதுவிட்டார். இந்தக் காட்சி பலரையும் கலங்க வைத்திருக்கிறது.
சபேஷ் நேற்று உடல்நலக் குறைபாடு காரணமாகக் காலமானார். இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் - முரளி இணைந்து 'தவமாய் தவமிருந்து', 'பொக்கிஷம்', 'சமுத்திரம்', 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' உள்ளிட்டப் பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
