இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்.!

நெல்லை

இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்.!

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

இதை அறிந்ததும் விண்ணப்பங்களை பெற நேற்று மாலை முதலே பெற்றோர்கள் வரிசையில் இடம் பிடிக்க ஆரம்பித்தனர். இரவு நேரத்தில் சாப்பிட சென்றால் வரிசை போய்விடும் என அங்கேயே அமர்ந்து சாப்பிட்ட ருசிகர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பெற்றோர்கள் தன் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் இருந்தே சிறந்த பள்ளிக்கூடங்களை தேர்வு செய்து அங்கு படிக்க வைக்க முயற்சிக்கின்றனர். இதற்காக எந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்பதை குழந்தை பிறக்கும் போதே தீர்மானித்து விடுகின்றனர். அப்படித்தான் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் மகள்களை எல்கேஜி வகுப்பில் சேர்பதற்காக விடிய விடிய பெற்றோர்கள் காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளி

நெல்லை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகள் இரட்டை நகரங்களாக விளங்கி வருகிறது. இதில் பாளையங்கோட்டை என்பது தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக இங்கு உள்ள பெண் குழந்தைகள் மட்டுமே படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தங்கள் மகள்களை சேர்க்க பெற்றோர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு மட்டும் ஒவ்வொரு புதிய காலாண்டின் போதும் புதிய மாணவர் சேர்க்கைக்கு கடுமையான போட்டி நிலவும்.

எல்கேஜி சேர்க்கைக்கான விண்ணப்பம்

அந்த பள்ளியில் இன்று முதல் எல்கேஜி வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கான சேர்க்கை விண்ணப்பம் விநியோகிக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது இந்த நிலையில் இதனை அறிந்த பெண் குழந்தைகளின் பெற்றோர் நேற்று நள்ளிரவு முதலே பள்ளி முன்பு குவிய தொடங்கினர். தங்களின் குழந்தைக்கு எப்படியாவது ஒரு இடம் வாங்கி விட வேண்டும் என்ற பரிதவிப்பில் இரவு முழுவதும் பள்ளியின் நுழைவாயில் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கினர்.

தங்கள் பிள்ளைகளை எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்தாலும் பரவாயில்லை என பெற்றோர்கள் வரிசையாக அமரத் தொடங்கினர். நேரம் ஆக ஆக பெற்றோரின் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் வரிசையிலேயே பெற்றோர் நிற்கும் சூழலும் உருவானது.

விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்

இந்த நிலையில் பெற்றோர்களை ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு யார் முதலில் வருகிறார்கள் என்பதை ஒரு நோட்டில் பெயராகவும் எழுதி வைத்து வரிசையில் இருக்கத் தொடங்கினர். இரவில் வரிசையை விட்டு நகர்ந்தால் இடம் போய்விடும் என்ற அச்சத்தில் வரிசையிலேயே பாய் விரித்து படுக்கும் நிலையும் காணப்பட்டது.

கடைக்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்தாலும் வரிசையில் இடம் போய்விடும் என்பதால் அங்கே அமர்ந்து இருந்தபடியே சாப்பிடவும் ஆரம்பித்தனர். நெல்லை பாளையங்கோட்டையில் பள்ளியில் எல்கேஜி விண்ணப்பம் பெறுவதற்கே இப்படி வரிசையில் பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் விடிய விடிய காத்து நின்ற சம்பவம் அங்கு ருசிகரத்தை ஏற்படுத்தியது.