திருச்சி விமானத்தில் உதயநிதி, எடப்பாடிக்கு அருகருகே இருக்கை ஒதுக்கியதால் பரபரப்பு.!
அரசியல்
சென்னை: சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அருகருகே சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடக்க இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் இருந்து பகல் 12.40 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருச்சிக்கு சென்று சென்று, திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக இருந்தது.
அதேபோல் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் அதே விமானத்தில் திருச்சி சென்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுவதாக இருந்தது. இதனால் நேற்று பகல் 12.40 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இருவருக்குமே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. அதோடு திருச்சி செல்ல இருந்த அந்த விமானம் சிறிய ஏடிஆர் ரக விமானம். எனவே இருவருக்கும் அருகருகே சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு அதிகாரிகள், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தனர். தற்போது தேர்தல் பிரசாரத்தில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியும், உதயநிதி ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் பெயர்களை சொல்லி நேரடியாக தாக்கிப் பேசி வரும் நிலையில் இருவரும் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணம் செய்தால் ஏதாவது பிரச்னை ஏற்படுமா என்ற பரபரப்பு அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருச்சிக்கு செல்ல இருந்த பயணத்தை நேற்று காலை 10 மணி அளவில் திடீரென ரத்து செய்தார். அதோடு பிற்பகல் 2 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 10 மணி வரையில் நிலவி வந்த பரபரப்பு ஓய்ந்தது. இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 2 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு திருச்சிக்கு சென்றார். அதைப்போல் 12.40 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் எடப்பாடி பழனிசாமி திருச்சி சென்றார். இதனால் திருச்சி விமான நிலையத்திலும் தொண்டர்கள் வரவேற்பு நிகழ்ச்சிகளில் எதுவும் பிரச்னை ஏற்படவில்லை.
