48 வருஷத்துக்கு பின் ஈரானுக்கு அடிச்சது ஜாக்பாட்.! ரூ.50,000 கோடி நிதியை விடுவித்த அமெரிக்கா. பாகிஸ்தான் பேச்சு வார்த்தையில் மெகா திருப்பம். அலறும் இஸ்ரேல்.!!
ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் முடக்கப்பட்ட 6 பில்லியன் டாலர் (சுமார் ₹50,000 கோடி) சொத்துகளை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. 2016-17 காலப்பகுதியைத் தவிர, கடந்த 48 ஆண்டுகளாக ஈரான் உலக நாடுகளுடனான வர்த்தகத்தில் கடும் முடக்கத்தைச் சந்தித்து வந்தது. தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே அமெரிக்கா ஈரானின் நிதியை விடுவிக்கச் சம்மதித்துள்ளது, தற்போதைய போர்ச் சூழலில் ஒரு முக்கிய 'திருப்புமுனையாகப்' பார்க்கப்படுகிறது.
கத்தார் மற்றும் இதர வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த இந்த 6 பில்லியன் டாலர் நிதியைப் பயன்படுத்தி, ஈரான் தனக்குத் தேவையான உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் 'ஹார்முஸ் ஜலசந்தியை' மீண்டும் திறப்பதற்கும், எண்ணெய் விநியோகத்தைச் சீரமைப்பதற்கும் இந்தப் பேச்சுவார்த்தை மிக அவசியமானதாகக் கருதப்படுகிறது. இந்த உடன்பாட்டின் மூலம் ஈரானின் வீழ்ச்சியடைந்த நாணயம் (Rial) வலுப்பெறவும், அந்நாட்டின் பணவீக்கம் குறையவும் வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாகச் சாடியுள்ளார். இதனை ஒரு "அரசியல் பேரிடர்" என்று அவர் வர்ணித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திறனை முழுமையாக அழிக்க இஸ்ரேல் முயன்று வரும் வேளையில், ஈரானுக்கு நிதி கிடைப்பது அந்த நாட்டுக்கு மீண்டும் பொருளாதார பலத்தைத் தரும் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது. மேலும், இந்த நிதி ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்குச் செல்லக்கூடும் என்றும் இஸ்ரேல் கவலை தெரிவித்துள்ளது.
மேலும் ட்ரம்ப் நிர்வாகம், இஸ்ரேலை ஆலோசிக்காமல் ஈரானுடன் தன்னிச்சையாக உடன்படிக்கை செய்துகொள்வதாக இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனினும், இந்தப் பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் குறைய வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
