ஜனநாயகன் படம் லீக்கான விவகாரம்.. சிபிஎப்சிதான் காரணமா? தணிக்கை வாரியம் பரபர விளக்கம்.!
ஜனநாயகன்
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் படம் சட்ட விரோதமாக ஆன்லைனில் கசிந்த நிலையில், தணிக்கை வாரியம் தரப்பில் இருந்து வெளியாகியிருக்கலாம் என பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பாக மும்பையில் உள்ள தணிக்கை வாரியம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். ஹெச் வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் கசிந்தது
ஜனநாயகன் திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து படக்குழு மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால் படம் தற்போது வரை தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை.
தற்போது தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் ஜனநாயகன் படம் தேர்தலுக்கு பிறகு தான் வெளியாகும் என கூறப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்களும் கடும் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ஜனநாயகன் முழு படமும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது.
தணிக்கை வாரியம் விளக்கம்
முதலில் சில நிமிட காட்சிகளும், பின்னர் முழு படமும் ஹெச்டி தரத்தில் வெளியானது. இதனால் படக்குழு கடும் அதிர்ச்சியடைந்தது. ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக வெளியானதற்கு சக நடிகர்களும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் ரிலீல் ஆனதில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறினார்.
தணிக்கை வாரியம் தரப்பில் இருந்து வெளியாகியிருக்கலாம் என பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான் தணிக்கை குழு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. தணிக்கை வாரியம் கூறுகையில், "திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாதுகாப்பான KDM (Key Delivery Message) முறையை தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது. சமர்பிக்கப்படும் படங்களுக்கு தனிப்பட்ட பாஸ்வேர்டு பாதுகாப்புடன் இருக்கும்.
இந்த கேடிஎம் பாஸ்வேர்டு முழுமையாக தயாரிப்பாளர் / இயக்குநரிடமே இருக்கும். முறையான கேடிஎம் இன்றி அந்தப் படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ முடியாது. ஜனநாயகன் படத்தின் டிசிபி எனப்படும் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ், மார்ச் 17 ஆம் தேதியன்று உரிய ஒப்புதலுடன் விண்ணப்பதாரரிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அப்போது முதல் அவர்களிடமே இந்த படம் உள்ளது" " என்று கூறியுள்ளது.
ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியான விவகாரத்தில் மத்திய அமைச்சர் எல். முருகனை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருந்தார். செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக சேட்டிலைட் கட்டுப்பாட்டில் இருக்கும். தற்போது அந்த சாட்டிலைட் பாஜகவிடமே உள்ளது.
எனவே திட்டமிட்டு இந்த படத்தை கசிய விட்டுள்ளனர். துணை முதல்வர் உதயநிதியும் மத்திய அமைச்சர் எல்.முருகனுமே காரணம். தவெக தலைவர் விஜய்க்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்படுத்தினாலும் தமிழக மக்கள் அவருக்கு துணையாக இருப்பார்கள்" என்று கூறியிருந்தார்.
