நான் ஒரு தினக்கூலி, அமுதவாணன் கிட்ட கால் கிரவுண்டு நிலம் வாங்கினேன் கே.பி.ஒய்.பாலா. !
சினிமா

சென்னை: கேபிஒய் பாலாவுக்கு உதவி செய்ய பணம் எப்படி கிடைக்கிறது? பென்ஸ் கார் பெயரில் பதிவாகி உள்ள நம்பர், பாலா தந்த ஆம்புலன்ஸ்களில் உள்ளதாம்.
இன்னும் ஆதாரங்களை வைத்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்களும், சந்தேகங்களும் வலம் வருகின்றன.. எனவே செய்தியாளர்களை அழைத்து, பாலா இதற்கெல்லாம் தெளிவான விளக்கம் தந்து, தான் குற்றமற்றவர் என்பதையும் நிரூபிக்க வேண்டும்" என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்திருந்தார்.. இந்நிலையில், கேபிஒய் பாலா தான் செய்யும் உதவிகள் குறித்து விளக்கம் தந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
KPY பாலா வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசியிருப்பதாவது: "யாரிந்த கேபிஒய் பாலா? பாலா ஒரு ஸ்கேம், பாலா ஒரு சர்வதேச கைக்கூலி, வசமா மாட்டிக்கிட்டான் என்றெல்லாம் கடந்த 2 நாட்களாகவே செய்திகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. இதெல்லாம் உடனே முடிந்துவிடும் என்றுபார்த்தால், தொடர்ந்து என்னை விமர்சனம் செய்வது அதிகரித்தவாறே இருக்கிறது.
ஒரே ஒரு படம் நடிச்சேன்.. அதுக்காக என்னை இப்படியெல்லாம் செய்வார்கள் என்று சத்தியமாக தெரியாது.. ஆம்புலன்ஸ் தந்தபோது, அதில் சின்ன "டி" எழுத்து ஸ்டிக்கர் பிரச்சனை வந்தது.. இதைவைத்து கொண்டு இப்படியா செய்வது? இந்த ஆம்புலன்ஸை வைத்து எத்தனையோ பேர் பிழைத்திருக்கிறார்கள், பலருக்கும் வாழ்வு தரப்பட்டுள்ளது.. பல உதவிகளை செய்வதால், எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது, பல மாணவர்கள் படிக்கிறார்கள்..
நம்பர் பிளேட் - சின்ன ஸ்டிக்கர் பிரச்சனை
ஆனால் இப்படியான விஷயங்களை பதிவு செய்யாமல், சின்ன "டி" எழுத்து ஸ்டிக்கர் பிரச்சனையை வைத்துக்கொண்டு, பாலாவின் முகத்திரை கிழிந்தது என்கிறார்கள்.. அதிலும் தினக்கூலியான என்னை சர்வதேச கைக்கூலி என்கிறார்கள்..
மருத்துவமனையை பாலா கட்டுகிறாரே, அதற்கு எப்படி காசு வந்தது என்று கேட்கிறார்கள்.. நான் பல நிகழ்ச்சிகளுக்கு சென்று சம்பாதிக்கிறேன், படம் நடிக்கிறேன், விளம்பரங்களில் நடிக்கிறேன், வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறேன்.
வெளிநாட்டிலிருந்து எனக்கு யாரோ பணம் தருகிறார்களாம்.. எனக்கு யாருங்க தரப்போறாங்க.. என்னிடம் எந்த டிரஸ்ட்டும் இல்லை.. எல்லாமே என்னுடைய சொந்த பணம்தான்.. இரவுப்பகலும் ஓடியாடி சம்பாதிக்கும் பணத்தில்தான் உதவிகளை செய்கிறேன்.
அமுதவாணன் கிட்ட கால் கிரவுண்டு நிலம்
அமுதவாணன் கிட்ட கால் கிரவுண்டு இடத்தை வாங்கி வீடு ஒன்றை கட்ட நினைத்தேன்.. ஆனால், அந்த இடத்தில் சின்னதா கிளினிக் ஒன்றை கட்டுகிறேன்..
ஆடம்பர காரும், அடுக்குமாடி வீடும் கட்டியிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என்று என்னிடம் சொன்னார்கள்.. அப்படி நான் செய்யாமல், அதில் கிளினிக் கட்ட நினைத்ததை இவ்வளவு பெரிய விஷயமாக்கிவிட்டார்கள்..
சம்பாதிப்பது நானா, இவங்களா?
என் பெயரை மக்களிடம் கலங்கடிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியான விஷயங்களை செய்கிறார்கள்.. என் மீதான விமர்சனங்கள் குறைந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால், அது அதிகரித்தவாறே சென்றதால்தான், இந்த வீடியோவை நான் வெளியிடுகிறேன்..
அதுமட்டுமல்ல, இவர்கள் இப்படி பேசுவதை வைத்து, பிறருக்கு உதவி செய்தால், நமக்கும் பிரச்சனை வந்துவிடும் என்று நினைத்து யாரும் பின்வாங்கிவிடக்கூடாது.. தொடர்ந்து உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.
நான் உதவி செய்வதை வீடியோவாக எடுத்து சம்பாதிக்கிறேன் என்கிறார்கள்.. நான் வீடியோவை இன்ஸ்டாவில்தான் பதிவிடுகிறேன், அதில் சம்பாதிக்க முடியாது.. ஆனால், சமீபமாலமாகவே என்னை பற்றி தவறாக பேசித்தான் யூடியூப்பில் சிலர் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்.. இவ்வளவு வன்மங்களை தாண்டிதான் இங்கே வாழ வேண்டியிருக்கிறது.
நல்லது செய்தாலே பிரச்சனையா
பிரச்சனை இருப்பதால்தான் நல்லது செய்கிறோம், ஆனால் நல்லது செய்வதே பிரச்சனை என்றால் என்ன செய்வது? இந்த 2 நாளாகவே நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம்.. எல்லாத்துக்கும் நன்றி.. ஆனால், எனக்கு எதிராக செய்வதை பார்த்து நான் ஓடமாட்டேன், எனக்குன்னு மக்கள் இருக்காங்க, அவங்களுக்காக நான் கடைசிவரை ஓடுவேன், தேங்க்யூ" என்று அந்த வீடியோவில் பாலா உணர்வுப்பூர்வமாக பேசியிருக்கிறார்.
அதேபோல, ஆம்புலன்ஸ், டூவீலர் பெற்றவர்கள், தங்களது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த நம்பர் பிளேட்டுடன் வந்து இந்த வீடியோவில் விளக்கம் தந்துள்ளனர்.