எடப்பாடி கே.பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் எனது நண்பனின் ஆத்மா என்னை மன்னிக்காது என டிடிவி தினகரன் உருக்கம் .!
அதிமுக

என்னை கட்சியை விட்டு நீக்கியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார்.
அப்படிப்பட்டவரை முதல்வராக ஏற்றுக் கொண்டால் என் நண்பனின் ஆன்மா என்னை மன்னிக்காது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். யார் அந்த நண்பர் என்பதை பார்க்கலாம்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருந்தது. அந்த கூட்டணியில் அதிமுகவும் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இணையவில்லை. ஒரு வேளை இணைந்தால் பாஜகவில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக உரிமை மீட்புக் குழுவின் தலைவர் ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு கூட்டணி கட்சி என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்குமே என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதற்கு பதில் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.
தற்போது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என சொல்லப்படுவதால் அந்த கூட்டணியிலிருந்து ஓபிஎஸ்ஸும் டிடிவி தினகரனும் விலகி விட்டனர்.
டிடிவி தினகரன் பிரஸ்மீட்
இந்த நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தான் ஏன் கூட்டணியில் இருந்து விலகினேன் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில், "எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி. அந்த துரோகியை நான் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் அது தற்கொலைக்கு சமம்" என்றார்.
ஆதரவு கடிதம்
மேலும் கூவத்தூரில் நடந்தது என்ன, சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் வாங்கும் போது தன்னிடம் எடப்பாடி வந்து தான்தான் முதல்வர் வேட்பாளர் என இப்போதே அறிவித்தால் யாரும் கையெழுத்திடமாட்டார்கள், எனவே கையெழுத்தை வாங்கிக் கொண்டு அறிவியுங்கள் என கெஞ்சியதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "அமித்ஷாவை சந்திப்பது குறித்து பகிரங்கமாக அனைவருக்கும் தெரியும் பட்சத்தில் நான் ஏன் முகத்தை கர்சிப்பால் மூட வேண்டும்?
தினகரன்-பாஜக கூட்டணி
தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து ஏன் வெளியேறினார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
முதல்வர்
இந்த நிலையில் இதுகுறித்து சென்னையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், என்னை கட்சியை விட்டு நீக்கியதாக சொல்லியிருக்கிறார். அவரை முதல்வராக ஏற்றுக் கொண்டால் என் நண்பரின் ஆன்மா என்னை மன்னிக்காது. அவங்களை மாதிரி என்ககு மாற்றி பேச தெரியாது என தெரிவித்துள்ளார்.
தினகரன் நண்பர்
இந்த பேட்டியில் டிடிவி தினகரன் நண்பர் என கூறியது யாரை தெரியுமா? மறைந்த பெரம்பூர் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல்தான். இவர் 2011 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் ஜெயலலிதா தனது பதவியை இழக்க நேரிட்டது. அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஜெயலலிதா போட்டியிட வசதியாக ஆர்.கே.நகர் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
யார் இந்த வெற்றிவேல்
ஜெயலலிதா மறைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டு தினகரன் அணியில் இருந்தார். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலும் இணைந்திருந்தார்.
வெற்றிவேல் எம்எல்ஏ
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின் போது ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்த வீடியோ மார்பிங் செய்யப்படவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.