அதிமுக - விலிருந்து செங்கோட்டையன் நீக்கம், ஓ பி எஸ் போனில் செங்கோட்டையனிடம் பேசினார். !

அதிமுக

அதிமுக - விலிருந்து செங்கோட்டையன் நீக்கம், ஓ பி எஸ் போனில் செங்கோட்டையனிடம் பேசினார். !

அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து இன்று நீக்கப்பட்ட செங்கோட்டையனிடம் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசி வாயிலாகப் பேசி ஆதரவு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியால் பதவி பறிக்கப்பட்ட செங்கோட்டையனை ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் இன்று சந்தித்த நிலையில், அவர்களின் செல்போன் வாயிலாக செங்கோட்டையனிடம் பேசி உள்ளார் ஓபிஎஸ்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் தலைமை நிலையச் செயலாளருமான செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள். அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். அவர்கள் அதிமுகவில் நிபந்தனையின்றி இணைந்து செயல்பட தயாராக இருக்கின்றனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.

செங்கோட்டையன் பதவி பறிப்பு

செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ள நிலையில் கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 3 மணி நேரமாக இந்த ஆலோசனை நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி, பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் நிபந்தனையை ஏற்க மறுத்துள்ளார்.

இதையடுத்து, அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளது.

பணி தொடரும் - செங்கோட்டையன்

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "சுயமரியாதையோடு யார் வேண்டுமானாலும் கருத்து சொல்வதற்கு அதிமுகவில் தடையில்லை என்று அவரே பல மேடைகளில் பேசியிருக்கிறார். ஆனால் இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு காலம் தான் பதில் சொல்லும். என்னை அதிமுக பொறுப்புகளிலிருந்து நீக்குவதற்கு முன்பு எனது பேச்சு குறித்து என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். கட்சி பொறுப்பில் இருந்து என்னை நீக்கியது கட்சிக்கு பாதிப்பா என்பது குறித்து காலம் தான் பதில் சொல்லும். "ஏற்கனவே சொன்னதைப் போலவே என் பணி தொடரும்" என்றார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

இந்நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள், செங்கோட்டையனின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் ஈரோட்டில் செங்கோட்டையனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று நீலகிரி மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து சால்வை அணிவித்து தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் செங்கோட்டையனின் கருத்துகள் ஓபிஎஸ் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். செங்கோட்டையனுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

செங்கோட்டையன் உடன் போனில் பேசிய ஓபிஎஸ்

செங்கோட்டையனை இன்று சந்திக்க வந்த ஒரு நிர்வாகியின் செல்போனுக்கு நேரடியாக தொடர்பு கொண்ட ஓ.பன்னீர்செல்வம், அந்த போன் வாயிலாக செங்கோட்டையனிடம் பேசியுள்ளார். பின்னர் செல்போனை வாங்கிக்கொண்டு தனி அறைக்குச் சென்ற செங்கோட்டையன் சுமார் 5 நிமிடங்கள், ஓபிஎஸ் உடன் பேசியதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக செங்கோட்டையனின் செயல்பாடுகள் தொடர்பாக நேற்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அதிமுகவின் மூத்த முன்னோடி செங்கோட்டையன் எம்ஜிஆரால் கட்சி தொடங்கிய போதில் இருந்து, இந்தக் கட்சிக்காக பாடுபட்டு கொண்டிருக்கிறார். எம்ஜிஆர் காலத்திலேயே மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். தொடர்ந்து, 23 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராகவும், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளனர். கட்சியின் உயர்மட்ட பொறுப்புகளில் இருந்து அனைத்து மக்களையும் அரவணைக்கும் தன்மையுடன், கட்சிக்காக அவர் ஆற்றிய பணி உண்மையிலேயே அளப்பரியது.

பல்வேறு சூறாவளிகள், சுனாமிகள் கட்சிக்கு வந்த போதும், நிலையாக நின்று, இந்தக் கட்சியை வளர்ப்பதற்காக அவர் பாடுபட்டுள்ளார். அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும், கட்சி ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி செய்தால், தான் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் நிறுவ முடியும் என்பதைத் தான், தனது மனதின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவரது எண்ணம், மனசாட்சி நிறைவேற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காகத் தான் நாங்களும் போராடி கொண்டிருக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.