ஓ.எம்.ஆர்.சாலையில் விடுதி நடத்தும் உரிமையாளரிடம் பணம் கேட்டு தராததால் தாக்கியதாக அதிமுக பிரமுகர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
சென்னை பெருங்குடி, சோழன் தெரு, கந்தன்சாவடியில் கெளதம்கிருஷ்ணன் ஆண்கள் தங்கும் விடுதி நடத்தி வருபவர் சீனிவாசலு (32), இவர் நடத்தி வரும் தங்கும் விடுதி முறையான அனுமதி பெறாமல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கந்தன்சாவடி பகுதியில் சமீபத்தில் நடந்த கோயில் குடமுழுக்கு விழாவிற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. விடுதி உரிமையாளர் பணம் தர மறுக்கவே, அதன் தொடர்ச்சியாக நேற்று காலை அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. கந்தனும், அவரது மகனுமான 182 வது வார்டு கவுன்சிலரின் உதவியாளரும், ஆதரவாளர்களுமான முருகன், கார்த்திக், மணி ஆகியோர் சென்று 50,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி முருகன் என்பவர் சீனிவாசலுவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளோடு, பாதிக்கப்பட்ட நபர் விடுதி சங்கம் மூலமாக போராட்டம் நடத்தி தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் தரமணி போலீசார் அதிமுக பிரமுகர்களான 182 வது வார்டு கவுன்சிலர் சதீஷின் உதவியாளர் முருகன், அதிமுக அம்மா பேரவை சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் கார்த்திக், மற்றும் அதிமுகவை சேர்ந்த மணி உள்ளிட்டோர் மீது ஆபாசமாக பேசுவது, தாக்குதல், மிரட்டி பணம் கேட்பது, 329(3), 296(b), 115(2), 308(3), 351(3), உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பணம் கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகர்களை தேடி வருகின்றனர்.
S S K