மகாராஷ்டிரா தேர்தல் அறிக்கையை வெளியிட்ட உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிராவின் 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். அதன் முடிவுகள் நவம்பர் 23-ஆம் தேதி அறிவிக்கப்படும். தற்போதைய மகாராஷ்டிர சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 26, 2024 அன்று முடிவடைகிறது.
இந்த நிலையில்தான் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT) தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
5 வாக்குறுதிகள்: முன்னதாக சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசின் மகா விகாஸ் அகாடி சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
மகாலட்சுமி திட்டம்: மகாராஷ்டிரா முழுவதும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச போக்குவரத்து வழங்கப்படும்.
க்ருஷி சம்ருத்தி (விவசாய செழிப்பு): மாநில விவசாயிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு, அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.3 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக எம்.வி.ஏ. அறிவித்து உள்ளது. கூடுதல் ஊக்கத்தொகையாக, தொடர்ந்து கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.50,000 வழங்கப்படும்.
யுவகண்ணா சப்தா (இளைஞர் ஆதரவு): வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க, மகாராஷ்டிராவில் வேலையில்லாத ஒவ்வொரு இளைஞருக்கும் மாதம் ரூ.4,000 உதவி வழங்கப்படும்.
குடும்ப ரக்ஷன் (குடும்பப் பாதுகாப்பு): இந்தத் திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ரூ. 25 லட்சம் மதிப்பிலான சுகாதாரக் காப்பீட்டுத் தொகையைப் பெறும். அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளும் இலவசமாகக் கிடைக்கும்.
சமந்தேச்சி ஹமி (சமத்துவத்திற்கான திட்டம்): மஹாராஷ்டிரா முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து, போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை ரத்து செய்வோம்.