முக்திநாத் ஆன்மிக பயணம் சென்று வந்த 389 பக்தர்களுக்கு அரசு மானியமாக தலா ரூ.30,000 வழங்கிய முதல்வர்.!
தமிழ்நாடு அரசு
சென்னை: சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆன்மிகப் பயணம் சென்று வரும் 60 முதல் 70 வயது வரை தலா 500 பக்தர்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
2023-24ம் நிதியாண்டில் மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ. 50,000ஆகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரமாகவும், 2025-26ம் நிதியாண்டில் மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சமாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 20,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
அதன்படி, நடப்பாண்டில் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட தகுதி வாய்ந்த 389 பக்தர்களுக்கு அரசு மானியமாக தலா ரூ.30,000 வீதம் 1.17 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இந்த அரசு பொறுப்பேற்றபின், ரூ. 9.94 கோடி அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 4,015 பக்தர்களும், ராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்திற்கு 1,520 பக்தர்களும்,
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு 3,004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு 3,014 பக்தர்களும் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட 1,034 பக்தர்களுக்கு ரூ. 2.36 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மானசரோவர் ஆன்மிகப் பயணம் செல்ல அனுமதி வழங்கப்படாததால் அரசு மானியம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
