சீன நிறுவனத்துடன் இணைந்து ரூ 300 கோடி மோசடி, கோவை இளைஞர் கைது. !
கோவை

சீன நாட்டை சேர்ந்த பங்கு வர்த்தக மோசடி கும்பல்கள், இந்தியாவில் டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போலி நிறுவனங்கள் தொடங்கி ஏராளமானவர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு பெற்று மோசடி செய்திருக்கின்றன.
இதில் தொடர்புடையர்கள் பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. அப்படி விசாரிக்கையில், சீன நாட்டு கும்பல் மேற்கொண்ட ரூ.300 கோடி மோசடியில் கோவையில் கைதான சித்திரவேல் என்ற இளைஞருக்கு தொடர்பு இருப்பது சிபிஐ நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
நமது நாட்டில் சீனா உள்பட சில வெளிநாடுகளில் இருந்து சிலர், உள்ளூரில் உள்ள சிலரின் உதவி மூலம், ஆன்லைனில் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்துள்ளனர். போலியாக நிறுவனங்களை தொடங்கி மக்களிடம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கூறி, நிறைய முதலீடுகள் செய்ய வைக்கிறார்கள். அதற்கு உள்ளூர் நபர்களை பயன்படுத்தி கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் வேண்டிய பணம் கிடைத்ததும், மொத்தமாக கடையை சாத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்.
அப்படித்தான் சீன நாட்டை சேர்ந்த பங்கு வர்த்தக மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போலி நிறுவனங்கள் தொடங்கி ஏராளமானவர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு பெற்று மோசடி செய்திருக்கிறார்கள். இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சீன மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருந்த கோவை ரேஸ்கோர்சில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 32 வயதாகும் சித்திரவேல் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் போலியாக தொடங்கப்பட்ட 33 நிறுவனங்களுக்கான போலி லெட்டர்பேடு, 70 சிம்கார்டு, வங்கிகளின் கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சித்திரவேலிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல் தெரியவந்துள்ளது. சீன நாட்டை சேர்ந்த ஹுவான் லியு என்பவர் பெங்களூரு பெலந்தூர் பகுதியில் வசித்து வருகிறாராம். இவருடன் சேர்ந்து சித்திர வேல், பங்கு வர்ததகம், கிரிப்டோ கரன்சி, முதலீட்டு இரட்டிப்பு உள்பட பல்வேறு பெயர்களில் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது. இதில், சித்திரவேலின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.59 லட்சம் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
இதில் சீன நாட்டினர் மேற்கொண்ட ரூ.300 கோடி மோசடியில் சித்திரவேலுக்கும் தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கைதான சித்திரவேலை, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சி.பி.ஐ. தரப்பு வக்கீல் சுரேந்திரமோகன் ஆஜராகி, சித்திரவேலை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு நீதிபதி சிவக்குமார் அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து சித்திரவேலை, கோவையில் இருந்து விமானம் மூலம் சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர்.