கன்னியாகுமரியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பு விழா. ! இதை எதிர்த்து போராட்டம் நடத்திய. பெண்கள் கடையை சூறையாடினர். !
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு மாம்பிளியாகுளம் பகுதியில் நேற்று மாலையில் டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தது. ஆட்டோவில் மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு டாஸ்மாக் ஊழியர்கள் வந்தார்கள். பின்னர் கடைக்குள் மதுபாட்டில்களை வைத்து விட்டு விற்பனையை தொடங்க ரெடியாக இருந்தார்கள்.
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
அப்போது கிராம மக்கள் ஊருக்குள் திடீரென டாஸ்மாக் கடை திறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் உள்பட ஏராளமானோர் கடையின் முன்பு திரண்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக திக்கணங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் அருளானந்த ஜார்ஜ், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர் ஆகியோரும் விரைந்து வந்தனர்
மதுபாட்டில்களை உடைத்தனர்
இதனை தொடர்ந்து மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அந்த சமயத்தில் திடீரென கடைக்குள் புகுந்த அவர்கள் மதுபாட்டில்களை தூக்கி வெளியே ஆவேசமாக வீசினர். மேலும் கடையை இழுத்து பூட்டினார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
டாஸ்மாக் இழுத்து பூட்டப்பட்டது
பெண்களின் ஆவேசத்தை தொடர்ந்து டாஸ்மாக் கடையில் இருந்த மதுபாட்டில்களை எடுத்துச் செல்லும்படி போலீசார், ஊழியர்களிடம் கூறினர். உடனே ஊழியர்களும் மதுபாட்டில்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். ஊருக்குள் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் இழுத்து பூட்டிய சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.