சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தொல் திருமாவளவன் விளக்கம். !
சென்னை

சென்னை: சாலையில் சென்ற பைக் மீது தனது கார் மோதியதாக எழுந்த விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து விசிக வழக்கறிஞர் அணி சார்பாக கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றிருந்தார். இந்த போராட்டத்தை முடித்து புறப்படும் போது, திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞர் ஒருவரின் பைக் மீது உரசியதாக கூறப்படுகிறது.
இதனால் கார் ஓட்டுநருடன் வாக்குவாதம் ஏற்பட, திருமாவளவனின் ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர் இடையில் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக திருமாவளவன் பேசுகையில், வழக்கறிஞர் வேண்டுமென்றே பைக்கை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை உள்ளிட்டோர் பேசியதால், பலரின் கவனம் திரும்பியது.
இந்த நிலையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அதில் திருமாவளவன் பேசுகையில், ஒரு கட்சித் தலைவர்.. அவரின் காரின் முன்பு சென்று ஒருவர் பைக்கை நிறுத்துகிறார்.. அவரின் பாதுகாப்பு தொடர்பாக எவரும் கேள்வி கேட்கவில்லை. திருமாவளவன் ஏன் இறங்கி சென்று தடுக்கவில்லை என்று கேட்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி முன்பு ஒருவர் சென்று பைக்கை நிறுத்தினால், இப்படி கேள்வி எழுப்புவார்களா?
ஒரு நிமிடம் கூட இல்லை.. என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. அவர் வந்து நின்று முறைத்தார். யாராக இருந்தால் என்ன என்று கேட்டார். அவர்களிடம் முறைத்ததால் அவர்கள் அடித்தார்கள்.. அவர் என்ன சாதி, என்ன மதம் என்று கூட தெரியாது.. ஓரமா நில்லுங்க என்று போலீசார் கேட்கிறார்கள்..
அவர்களிடமும் முறைக்கிறார்.. யாராக இருந்தால் என்ன என்று முறைத்தார்.. முறைத்து பார்த்ததால் தான் அடி வாங்கினார்.. அவ்வளவு திமிராடா உனக்கு.. ஆணவமாடா உனக்கு.. என்றுதான் அடித்தார்கள்.. வெறும் 4 அடிதான்.. ஒழுங்காக கூட அடிக்கவில்லை.. உடனே அவர் மயக்கம் போட்டு நெஞ்சு வலிக்கிறது என்று நாடகமாடுகிறார். என்ன நாடகம் பாருங்க..
போலீசாரிடம் நானே தெரியாமல் பண்ணிவிட்டார் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.. நமது ஆட்களையும் அமைதிப்படுத்தினேன்.. உடனே திருமாவளவன் தான் அடிக்க சொன்னாரு என்கிறார்கள்.. அடங்க மறு என்று தான் சொல்லி இருக்கிறேன்.. எந்த இடத்திலும் வன்முறையை தூண்டியதில்லை.. அடங்க மறு என்பது ஒரு அரசியல் என்று தெரிவித்துள்ளார் தொல் திருமாவளவன்.