கோவையில் புதிதாக திறக்கப்பட்ட GD நாயுடு பாலம் அருகே.. நள்ளிரவில் கோர விபத்து.. 3 பேர் பலி .!

கோவை

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட GD நாயுடு பாலம் அருகே.. நள்ளிரவில் கோர விபத்து.. 3 பேர் பலி .!

கோவை: கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள GD நாயுடு பாலத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் மிக நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட பாலம் என்பதால் ஏராளமான மக்கள் தினந்தோறும் இதில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பாலத்தில் நள்ளிரவில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டத்தின் முக்கியப் பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுடன் கோவை மாநகரை இணைப்பது அவிநாசி சாலை தான். 

அங்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், விமான நிலையம் ஆகியவை உள்ளது. இதனால் அந்தப் பகுதி எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

போக்குவரத்து நெரிசலை எளிமைப்படுவதற்காக அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.கடந்த அதிமுக ஆட்சியில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவித்தனர். இதற்காக சுமார் ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின.

தமிழ்நாட்டின் நீளமான பாலம் என்ற பெயரை பெற்ற இந்த பாலத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே இந்த பாலத்தை மேலும் 5 கி.மீ தொலைவுக்கு நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பால பணிகள் நிறைவடைந்து, கடந்த 9 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதன்பிறகு பல ஊர்களிலிருந்தும் மக்கள் பாலத்தைக் காண வாகனங்களில் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட்வின்ஸ் பகுதிக்கு GD மேம்பாலத்தில் சென்ற கார், பாலத்தில் இருந்து வேகமா இறங்கிய போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த இருகூரைச் சேர்ந்த சேக்உசேன் மற்றும் அவருடன் பயணித்த பெண் மற்றும் இளைஞர் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கிப் போனது. காரில் இருந்த 3 பேரின் உடல்களையும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் போலீசார் மீட்டு, ESI மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மற்ற இருவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.