புதிய மேம்பாலத்தில் அனுமதியின்றி ஏராளனமான அதிமுக வினரோடு எஸ்.பி.வேலுமணி, வழக்குப்பதிவு செய்த காவல்துறை. !
கோவை

கோவையில் புதிதாக கட்டப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தில் அனுமதியின்றி ஒன்று கூடி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பந்தய சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை மாவட்டத்தின் இதய பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. அங்கு உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிமீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி அதிமுக ஆட்சியில் தொடங்கியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த பாலத்தை நேற்று முன்தினம் பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். முன்னதாக மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பாலம் என்று பெயரிடுவதாக அவர் அறிவித்தார்.
அவிநாசி மேம்பாலத்தைக் கட்டியது அதிமுக. ஆனால், திமுக அதற்கு பெயர் வைத்து ஸ்டிக்கர் ஒட்டுவதாக அதிமுகவினர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோல்டுவின்ஸ் பகுதியில் மேம்பாலத்தை நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியிலேயே 55 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டது.
2021 ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஒன்றரை வருடம் பணிகள் மந்தமாக சென்றது. தாமதப்படுத்தாமல் செய்திருந்தால் 2 வருடங்களுக்கு முன்னரே மேம்பாலத்தை திறந்திருக்கலாம். கோவை மாவட்டத்திற்கு அதிகளவு மேம்பாலங்களை கொண்டு வந்தது எடப்பாடியார் ஆட்சியில் தான். திமுக திறந்து வைத்தாலும், இந்த மேம்பாலமும் காலம் காலமாக எடப்பாடியார் பெயரைத்தான் சொல்லும் என்று கூறியிருந்தார்.
இந்த பாலப் பணிகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் துவங்கியது என்பதால் அதிமுகவினர் தனியாக இன்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், கே.ஆர்.ஜெயராமன், கிணத்துகடவு தாமோதரன், முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் உப்பிலிபாளையம் பகுதியில் ஒன்று கூடினர்.
மேளதாளம் முழங்க பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் ஏராளமான கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் 10 கிலோமீட்டர் தூரம் பயணித்தனர். சாலையை மறித்து அதிமுகவினர் மேற்கொண்ட கொண்டாட்டத்தால் பொதுமக்கள் போக்குவரத்து நெருக்கத்தில் சிக்கி தவித்தனர்.
இந்நிலையில், உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மேளதாளங்கள் அடித்து, சாலையில் பேப்பர் ஸ்பிரே செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் மீது பந்தய சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.