இந்துக்கள் அல்லாதோர் வீடுகளுக்கு தங்கள் மகள்கள் சென்றால் அடித்து காலை உடையுங்கள் என பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு. !
போபால்

''இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்கு மகள் சென்றால், அவரது கால்களை பெற்றோர் உடைக்க வேண்டும்'' என்று முன்னாள் எம்.பி.
பிரக்யா தாக்குர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபால் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்குர். இவரது பேச்சுகள் அவ்வப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் போபாலில் சமீபத்தில் நடைபெற்ற மதம் தொடர்பான நிகழ்ச்சியில் பிரக்யா தாக்குர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
தங்களது மகள்கள் இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்கு செல்வதை பெற்றோர் தடுக்க வேண்டும். நீங்கள் சொல்வதை மகள்கள் கேட்காவிட்டால், அவர்களது கால்களை பெற்றோர் உடைக்க வேண்டும். உங்கள் விருப்பத்துக்கு எதிராக மகள்கள் நடந்து கொண்டால், அவர்களை தண்டிக்க வேண்டும். உங்கள் மனதை பலமாக்கிக் கொள்ளுங்கள்.
பெற்றோரின் மதிப்பை புரிந்து கொள்ளாத, அவர்கள் சொல்வதை கேட்காத பெண்கள் தண்டிக்கப்பட வேண்டும். உங்கள் மகள்களின் வருங்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை அடிக்க வேண்டியிருந்தால், அதில் இருந்து பின்வாங்காதீர்கள். பெற்றோர்கள் அப்படி நடந்து கொள்ளும் போது, அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
வீட்டை விட்டு ஓடிப் போக நினைக்கும் மகள்களை பெற்றோர் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அன்பாக எடுத்து சொல்லியோ, அல்லது அடித்தோ, திட்டியோ அவர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு பிரக்யா தாக்குர் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா கூறும்போது, ''மத்திய பிரதேசத்தில் வெறும் 7 பேர்தான் மதம் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி இருக்கும் போது எதற்கு பாஜக.வினர் இவ்வளவு கூச்சல் போடுகின்றனர். வெறுப்புணர்வை பரப்பி வருகின்றனர்'' என்று கண்டனம் தெரிவித்தார்.