உச்சகட்ட வன்முறை-அடுத்தடுத்து ஆதரவு வாபஸ்.. மணிப்பூர் பாஜக அரசு கவிழுமா? சட்டசபை கட்சிகள் பலம் என்ன?

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் நீடிக்கும் நிலையில் ஆளும் பாஜக அரசுக்கான ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்பப் பெற்றுள்ளது.
60 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 31 எம்.எல்.ஏக்கள். பாஜகவோ தனித்தே 37 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கிறது. அத்துடன் ஜேடியூ, நாகா மக்கள் முன்னணி உள்ளிட்டவைகளின் ஆதரவும் இருப்பதால் தற்போதைய நிலையில் மணிப்பூர் பாஜக அரசுக்கு எந்த ஒரு நெருக்கடியும் ஏற்படவில்லை.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து வன்முறைகள் நீடிக்கின்றன. மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையேயான இந்த வன்முறை தொடருவதால் உச்சகட்ட பதற்றம், இணைய சேவை துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவு, ஆயுதப் படை சட்டம் அமலாக்கம் உள்ளிட்டவையும் நீடிக்கின்றன.
இந்த நிலையில் மணிப்பூர் ஆளும் பாஜக அரசு, வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதால் அந்த அரசுக்கான ஆதரவை 7 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சி இன்று வாபஸ் பெற்றுள்ளது.
மணிப்பூர் மாநில சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள். 2022-ம் ஆண்டு மணிப்பூர் சட்டசபை தேர்தலில் 60 இடங்களில் போட்டியிட்ட பாஜக 32 இடங்களைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட குக்கி மக்கள் முன்னணி, 7 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட என்பிபி, 6 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஜேடியூ, 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட என்பிஎப் ஆகியவை ஆதரவு தந்தன. பின்னர் ஜேடியூவின் 5 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இதனால் பாஜகவுக்கு 37 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது.
இந்த நிலையில் மணிப்பூர் தொடர் வன்முறைகளால் 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட குக்கி மக்கள் முன்னணி கடந்த ஆண்டு பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது 7 எம்.எல்.ஏக்களைக் கொண்ட என்பிபியும் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றது. பாஜக அரசுக்கு 9 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லை என்றாலும் அக்கட்சியின் 37 எம்.எல்.ஏக்கள், ஜேடியூவின் 1எம்.எல்.ஏ, என்பிபிஎப்பின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது. இதனால் மணிப்பூர் பாஜக அரசுக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை.
2022-ம் ஆண்டு மணிப்பூர் சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள்
பாஜக 32
நாகா மக்கள் முன்னணி (என்பிஎப்) 5
தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 7
ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 6
காங்கிரஸ் 5
குக்கி மக்கள் முன்னணி 2
சுயேட்சைகள் 3