முதல்வர் & அமைச்சர்கள் கைது செய்யப்பட்டாலே பதவி நீக்கம்.. மத்திய அரசின் புதிய மசோதா சொல்வது என்ன ?
புதுடெல்லி

டெல்லி: ஊழல் புகார் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதாகும் போது பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் புதிய மசோதா இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வர என்ன காரணம்.. இந்த மசோதா கூறுவது என்ன.. இதை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு மசோதாக்களைக் கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டாலும் கூட அதையும் தாண்டி முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையே இன்றைய தினம் மத்திய அரசு 3 மசோதாக்களை கொண்டு வருகிறது.
3 மசோதா
ஆன்லைன் கேமிங், காஷ்மீர் மாநில அந்தஸ்து மற்றும் பிரதமர், முதல்வர்கள் பதவிநீக்கம் என 3 மசோதாக்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதில் பிரதமர், முதல்வர்கள் பதவிநீக்கம் செய்யும் மசோதா ரொம்பவே முக்கியமானது. இந்த மசோதா குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் தற்போதுள்ள சட்டப்படி முதல்வர் அல்லது அமைச்சர் குற்ற வழக்கில் கைதானாலும் கூட பதவியைத் தொடரலாம். டெல்லி மாஜி முதல்வர் கெஜ்ரிவால், தமிழகத்தில் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்ட போதும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தனர். காவலில் இருக்கும் ஒருவர் முதல்வர் அல்லது அமைச்சராக இருக்க முடியாது என்று எந்தவொரு சட்டமும் இல்லாததே இதற்குக் காரணமாகும்.
30 நாள் சிறையில் இருந்தால் பதவிநீக்கம்
இந்தச் சூழலில் தான் இதை மாற்றும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கிய மசோதாவை கொண்டு வர இருக்கிறது. இதன்படி பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கைது அல்லது காவலில் எடுக்கப்பட்டால் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவார்கள். இந்தச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைக்கும் குற்றங்களுக்குத் தொடர்ந்து 30 நாட்கள் கைது அல்லது காவலில் வைக்கப்பட்டால், அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
அதாவது முதல்வர் அல்லது அமைச்சர் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் இருந்தால் 31வது நாளில் அவர் பதவியை இழப்பார். இதேபோன்ற ஒரு சட்டம் அரசுகளுக்கும் முன்மொழியப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் அல்லது மத்திய அமைச்சர் தொடர்ந்து 31 நாட்கள் காவலில் இருந்தால் அவர்களும் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.
மத்திய அரசு சொல்வது என்ன!
இந்த மசோதா தொடர்பாக விளக்கும் வகையிலான ஒரு செய்திக்குறிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், "தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் அரசியல் நலன்களுக்கு அப்பால் பொது நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பதவி வகிக்கும் அமைச்சர்களின் குணம் மற்றும் நடத்தை எந்தச் சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.
கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும், கைது செய்யப்பட்டுக் காவலில் இருக்கும் ஒரு அமைச்சர், அரசியலமைப்பின் தார்மீக நெறிகள் தடுக்கலாம். இதனால் மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை குறையும். இப்போது கடுமையான குற்றவியல் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்படும் ஒரு அமைச்சரைத் தகுதி நீக்கம் செய்ய அரசியலமைப்பில் எந்த ஒரு விதியும் இல்லை.
பதவிநீக்கம் செய்யலாம்
மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 75, 164 மற்றும் 239AA பிரிவுகளைத் திருத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதன் மூலம், பிரதமர் அல்லது மத்திய அமைச்சர், மற்றும் மாநிலங்கள் மற்றும் டெல்லி தேசியத் தலைநகரப் பிரதேசத்தின் முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் போன்றவர்களை இத்தகைய வழக்குகளில் கைது செய்யப்பட்டால் அவர்களைப் பதவி நீக்கம் சட்ட கட்டமைப்பை உருவாக்க முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இருப்பினும், இதை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளன. பல குற்றச்சாட்டுகளில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அவ்வளவு ஏன் முதல்வர்களே கைது செய்யப்படுகிறார்கள். இருப்பினும், பல நேரங்களில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுவதில்லை. அப்படி இருக்கும்போது கைது செய்தாலே பதவி நீக்கம் என்பது அரசியல் பழிவாங்கலுக்காகவே பயன்படும் என அவர்கள் விமர்சித்துள்ளனர்.