கிரீன் காரிடார், வேகத்தடைகள் கூடாது.. கரூர் போக. காவல்துறையில் தவெக தலைவர் விஜய் வச்ச கோரிக்கைகள் .!
த வெ க

கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கனும், அதுக்கு நான் போகிற வழியில் கிரீன் காரிடார் வேணும், வேகத்தடைகள் இருக்க கூடாது என அடுக்கடுக்கான கோரிக்கைகளை தமிழக டிஜிபியிடம் விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோரிக்கைகளை பார்க்கும்போது போலீஸ் அனுமதி கொடுத்துவிட கூடாது என்பதற்காக முன்வைக்கப்பட்டது மாதிரி இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களை உடனடியாக சந்தித்தது என்னவோ திமுக, அதிமுக தலைவர்கள்தான். சம்பவம் நடந்த ஒரு வாரம் கழித்து தவெக உள்ளூர் நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனால் விஜய் இன்னும் நேரில் போகவே இல்லை. இது பெரிய விமர்சனமாக வெடித்த நிலையில், கரூர் போக அனுமதி கேட்டு டிஜிபியிடம் விஜய் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
விஜய் முன்வைத்த கோரிக்கைகள்
அந்த மனுவில் விஜய் முன் வைத்திருந்த கோரிக்கைகள் ஓவராக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதாவது "நான் தனி விமானத்தில் திருச்சி வருவேன். ஆனால் சென்னை, திருச்சி இரண்டு விமான நிலையங்களிலும் ரசிகர்கள் பொதுமக்கள் இருக்கக் கூடாது. திருச்சி விமான நிலையம் முதல் கரூர் வரை க்ரீன் காரிடர் வேண்டும். நான் செல்லும் வழியில் உள்ள வேகத்தடைகள் அகற்ற வேண்டும். கரூரில் துக்கம் விசாரிக்கும் வீடுகளை தவிர, சந்திக்கப் போகும் இடத்தில் வேறு யாரும் இருக்கக் கூடாது. பத்திரிகை, டிவி நிருபர்கள் படம் பிடிக்கவோ, கேள்வி கேட்கவோ அனுமதிக்கக் கூடாது" இப்படி நிபந்தனைகளை அடுக்கியிருக்கிறார்.
கிரீன் காரிடார் என்றால் என்ன?
விபத்து நேரத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை வேறு ஒருவருக்கு பொறுத்த, ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லும்போது போகும் வழியில் எந்த சிக்னலிலும் ரெட் லைட் எரியக்கூடாது. அனைத்தும் கிரீன் சிக்னலாக இருக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு பெயர்தான் கிரீன் காரிடார். அப்படியான தடையற்ற அனுமதியை விஜய் கேட்கிறார்.
காவல்துறை மீது பழி
அதெப்படிங்க, எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத ஒரு அரசியல் தலைவருக்காக வேகத்தடைகளை எடுக்கனும், சிக்னல் இருக்கக்கூடாது, பத்திரிகையாளர் வருவதற்கு கூட தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட முடியும்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன. விஜய் வரட்டும், அவர் தனது ரசிகர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் உத்தரவிடட்டும். அதை அவர்கள் பின்பற்றட்டும். அதெல்லாம் விட்டுவிட்டு நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கைகளை வைத்துவிட்டு, அரசு அனுமதி கொடுக்கவில்லை, காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்று சொன்னால், அதை விமர்சனமாக மாற்ற விஜய் காத்திருக்கிறாறோ? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யாருடைய பொறுப்பு?
இந்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட எஸ்பிஐ அணுக வேண்டும் என்று விஜய்க்கு, டிஜிபி அலுவலகம் பதிலளித்திருக்கிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொண்டர்களை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் இளைஞர் அமைப்புகள், ஒருங்கிணைப்பு குழுக்கள் இருக்கும். ஆனால் விஜய் கட்சியில் அப்படி இருப்பதாக தெரியவில்லை. அரசியல் சித்தாந்தமற்ற இளைஞர் கூட்டத்தை, எந்த நோக்கமும், இலக்குமற்ற கூட்டத்தை கட்டுப்படுத்துவது சவலான பணி. அதை காவல்துறை எப்படி செய்யும்? கட்சியின் தலைவர் என சொல்லிக்கொள்பவர்கள்தானே அதை செய்ய முடியும்? என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.