கோவை மாநகர திமுக செயலாளர் நா.கார்த்திக் மாற்றம், செந்தில் பாலாஜி அதிரடி. !

கோவை

கோவை மாநகர திமுக செயலாளர் நா.கார்த்திக் மாற்றம், செந்தில் பாலாஜி அதிரடி. !

கோவை மாநகர திமுக மாவட்டச் செயலாளராக இருந்த நா. கார்த்திக் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக, செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தமிழ்செல்வன் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 180 நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் செயல்வீரர்கள் கூட்டம், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்தி உற்சாகப்படுத்தி வருகிறது. இதனையடுத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடத்தி முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் செயல்படாத மாவட்ட செயலாளர்கள்மாற்றப்படுவார்கள் என திமுக தலைவராக உள்ள ஸ்டாலின் எச்சரித்திருந்தார். அந்த வகையில் தற்போது கோவைக்கு பொறுப்பாளாராக உள்ள செந்தில் பாலாஜியின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாநகர திமுக மாவட்டச் செயலாளராக இருந்த நா. கார்த்திக் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளராக செந்தமிழ்செல்வன் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர திமுக மாவட்டச் செயலாளராக நா. கார்த்திக் சுமார் 8 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார். இவருக்கு எதிராக திமுகவிலேயே பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையை முழுவதுமாக அதிமுக கைப்பற்றிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனது கோட்டையாக மாற்றியது. இதற்கு முக்கிய காரணமாக செந்தில் பாலாஜி இருந்தார். எனவே இந்த முறை கோவையை திமுக தனது கோட்டையாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவராக உள்ள செந்தில் பாலாஜியை கோவைக்கு பொறுப்பாக நியமித்துள்ளது.

அந்த வகையில் கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகிய பகுதிகளுக்கு மாவட்ட பொறுப்பாளராக தொண்டாமுத்தூர் ரவி மற்றும் தளபதி முருகேசன் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் கோவை கார்த்திக்கின் பதவி பறிக்கப்பட்டு செந்தமிழ் செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர் செந்தில் செல்வன், செந்தில் பாலாஜியின் நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்படுகிறது. எனவே தேர்தலில் எந்த வித தொய்வும் இல்லாமல் பணிகள் நடைபெற வேண்டும் என்பதற்காகவே மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாட்கள் செல்ல செல்ல பல்வேறு மாவட்டங்களிலும் செயல்படாத நிர்வாகிகள் அடுத்தடுத்து மாற்றப்படுவார்கள் என திமுக தலைமை வட்டார தகவல்கள் கூறப்படுகிறது.