மது குடிக்க பணம் தராத தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை.!
தென்காசி

மது குடிக்க பணம் தராத தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை.!
தென்காசி, செப் - 17
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் மது குடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் தந்தையை அடித்து கொலை செய்த மகனுக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தப்பிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் ப்ரைசன் (வயது 33) இவர் கடந்த 17.06 2021 அன்று அவரது தந்தை ஜான் தனபால்
(வயது 56/2021) என்பவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் அருகில் கிடந்த கம்பை எடுத்து அவரது தந்தையான ஜான்தனபாலை அடித்துள்ளார். இதனால் கீழே விழுந்த ஜான் தனபால் உயிரிழந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரைசன் சிவசைலம் கிராம நிர்வாக அலுவலர் ப்யூலாவிடம் நடைபெற்ற சம்பவத்தை எடுத்துக் கூறி சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ப்ரைசனை ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ராஜவேல் குற்றவாளியான கருத்தபிள்ளையூர் ஜான் தனபால் என்பவரின் மகன் பிரைசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பி.குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆகியோருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் எஸ்.அரவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர்
AGM கணேசன்