ரவுண்டா 50 சீட்டு, நயினார் கையில் லிஸ்ட், .!
அதிமுக

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணியில் கூட்டணி பேரம் சூடு பிடித்திருக்கிறது.
ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற அடிப்படையில் பாஜக அதிமுகவிடம் 39 தொகுதிகளும், சிறிய கட்சிகளுக்கு 11 தொகுதிகள் என மொத்தம் 50 தொகுதிகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகச் சொல்லியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. இதுவரை அடுத்தடுத்து இரு சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக தோற்றதில்லை என்ற சாதனையைத் தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி கடுமையாக முயன்று வருகிறார்.
மேலும் 2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி, அதற்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள், ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்தார். இதை அடுத்து தோல்விப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2026 சட்டமன்றத் தேர்தல் இருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.
எடப்பாடி பழனிசாமி
அதே நேரத்தில், மறுபுறம் திமுக அசாத்தியமான கூட்டணி பலத்தோடு இருக்கிறது. காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக என பல கட்சிகள் அங்கு இருக்கின்றன. திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் அதற்கேற்ற கூட்டணி பலம் வேண்டும் என்பது அதிமுகவின் எண்ணம். இதற்காக கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பாஜக கூட்டணி
தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. மேலும் தேமுதிக பாமகவையும் அழைத்து வரப் பேச்சுவார்த்தை நடக்கிறது. பாமகவுக்கு 30 முதல் 35 சீட்டுகள் வரை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க நேற்று சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். அதில் அடுத்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தமிழகம் வரும் நிலையில் அது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரன்
மேலும் சீட்டுப் பேரம் தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி உடன் நயினார் நாகேந்திரன் கிட்டத்தட்ட 40 நிமிடத்திற்கும் மேலாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாவது இடத்துக்கு வந்த நிலையில் அந்தத் தொகுதிகளில் இருக்கும் அதிக வாக்கு பெற்ற பகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை பாஜக கேட்டதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியும் பாஜகவுக்கு என சில தொகுதிகளைப் பட்டியலிட்டு வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
நயினார் நாகேந்திரன் தரப்பில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற அடிப்படையில் 39 சீட்டுகளை பாஜகவுக்கும், சிறிய கட்சிகளுக்கு 11 தொகுதிகள் என மொத்தம் 50 தொகுதிகளைக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது 234 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கும் நிலையில், பாமகவுக்கு 30, பாஜகவுக்கு 25, தேமுதிகவுக்கு 25 என மொத்தம் 80 தொகுதிகளையும் சிறிய கட்சிகளுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக களமிறங்க வேண்டும் என்பது எடப்பாடியின் திட்டம்.
25 சீட் ஒதுக்கீடு
நேற்றைய பேச்சுவார்த்தையில் 50 தொகுதிகளைக் குறைத்து 25 தொகுதிகளை ஓகே செய்யத் தயார் என எடப்பாடி பழனிசாமி சொன்னதாகச் சொல்லப்படுகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்து பல கட்டப் பேச்சுவார்த்தைகள் இருக்கின்றன என்கின்றனர் பாஜகவினர். மோடி, அமித்ஷா வருகையின் போது தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படலாம் என்றும் சொல்கின்றனர்.