காரில் ஒன்றாக பயணித்த இரு வேறு அரசியல் தலைவர்கள்

ஒரே காரில் ஒன்றாக சென்றிருக்கிறார்கள் 2 கட்சி தலைவர்கள்.. இதுசம்பந்தமான விஷயம், திமுக, அதிமுக மேலிடம்வரை சென்றிருக்கிறது.
இந்த சம்பவம்தான் தமிழக அரசியல் களத்தில் தற்போது பரபரப்பாகவும், வியப்பாகவும் பேசப்பட்டு வருகிறது..
அதிமுகவில் தம்பிதுரையை பொறுத்தவரை, மிக முக்கியமான மூத்த நிர்வாகி ஆவார். எம்ஜிஆர் கால அரசியல்வாதியான அவருக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா உரிய கவுரவம் அளித்து அவரது பணிகளை பலமுறை பாராட்டியிருக்கிறார்.
அதேபோல மறைந்த கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக கடைசிவரை செயல்பட்டவர் டி.ஆர்.பாலு. இன்னும் சொல்லப் போனால் கருணாநிதியின் அரசியல் நிழல் என்றுகூட சொல்லலாம். திமுகவை சென்னையில் ஒரு பலம் பொருந்திய அமைப்பாக மாற்றியதில் முக்கிய பங்கு டி.ஆர்.பாலுவுக்கும் போய்ச் சேரும்.
2 மூத்த தலைவர்கள்: அந்தவகையில், தம்பிதுரை, டி.ஆர். பாலு இருவருமே தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதவர்கள்.. டெல்லி அரசியல்வாதிகளுக்கு தமிழக அரசியல் கட்சிகளை அணுக வேண்டும் என்றால், இந்த 2 சீனியர் தமிழக அரசியல்வாதிகளையும்தான் தொடர்பு கொள்கின்றனர்.
அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருக்கும்போது, பார்லிமென்டிலோ அல்லது வெளியே மத்திய அரசை எதிர்த்து போரட்டம் நடத்த வேண்டும் என்றாலும்சரி, அல்லது கூட்டணி சமாச்சாரம் என்றாலும்சரி, இவர்கள் இருவரையும் தவிர்த்துவிட்டு முடிவுகளை எடுக்க முடியாது.
சுவாரஸ்யம்: அந்த அளவுக்கு டெல்லியில், முக்கிய இடத்தை பெற்றுள்ளார்கள் இரு தமிழக தலைவர்களும் பெற்று வருகிறார்கள்.
அதாவது, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொண்ட லோக்சபா வின் திமுக தலைவர் டி.ஆர்.பாலு, தனது கார் வருவதற்கு லேட் ஆனதால் , அதிமுக எம்.பி. தம்பிதுரையின் காரில் ஏறி தன்னுடைய வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். தங்களின் கார்களுக்காக எம்.பி.க்கள் காத்திருந்தபோது, பாலுவின் கார் வரவில்லையாம். அந்த நேரம் பார்த்து தம்பிதுரையின் கார் வந்துள்ளது.
இறக்கி விட்டு: அதைப்பார்த்ததுமே, "துரை, உன் காரில் நான் ஏறிக்கிறேன். போற வழியில என்னை வீட்டுல இறக்கி விட்டுடு" என்று உரிமையாக கேட்டுக்கொண்டே அவரது காரில் ஏறிக் கொண்டாராம் டிஆர் பாலு. போகும் போது ஜாலியாக நிறைய அரசியல் விஷயங்களைப் இருவரும் பேசிக்கொண்டே போனார்களாம்..
குறிப்பாக, "மோடியுடன் கூட்டணி வெச்சிப்பீங்களா? மாட்டீங்களாப்பா?" என்று ஜாலியாக பாலு கேட்க, "கூட்டணி கூடாதுன்னு எடப்பாடி உறுதியா இருக்காரு. ஆனா, மேலே இருக்கிறவங்க எங்க ஆட்கள வெச்சே எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்கிறாங்க. அடுத்த மாசம் பொதுக் குழு நடக்குதில்லே! அதுல கட்சிக்காரர்கள்ட்டே இத பத்தி எடப்பாடி பேச நினைக்கிறாரு. அப்புறம்தான் தெரியும்" என்று தம்பிதுரை சொன்னாராம்.
தம்பிதுரையிடம் விசாரிப்பு:
தன்னுடைய காரில் பாலுவை ஏற்றிக்கொண்டு போய், அவரது வீட்டில் இறக்கி விட்ட விஷயம், எடப்பாடி பழனிச்சாமியின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது.இதனால், உடனடியாக டி.ஆர்.பாலுவுடனான பயணம் பற்றி தம்பிதுரையுடன் விசாரிக்க, அவரிடம் இருவருக்குமிடையே நடந்த சம்பாஷனைகளை விவரித்தாராம் தம்பிதுரையை எடப்பாடி பழனிசாமி விசாரித்தது போலவே, அதிமுக சீனியர்கள் பலரும் தம்பிதுரையிடம் விசாரித்தார்களாம்.
ஆனால், இவர்கள் இருவரும் இப்படி ஒன்றாக காரில் செல்வது இது முதல்முறை கிடையாது.கடந்த 2013 ஆகஸ்ட் மாதம், அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடந்தது.
ஜெயலலிதா: அந்த கூட்டம் முடிந்ததும் தம்பிதுரை தன்னுடைய காரில் கிளம்பினார். அப்பொழுது டி.ஆர். பாலு எதிரில் வருவதைப் பார்த்ததும் தன்னுடைய காரிலிருந்து இறங்கி வந்து அவரிடம் பேசியுள்ளார்.பிறகு, டி.ஆர். பாலுவை தன்னுடைய காரில் தம்பித்துரை ஏற்றிக் கொண்டு கிளம்பியுள்ளார்.. ஜெயலலிதாவுக்கும் இந்த சம்பவம் காற்று வாக்கில் போனதாக, செய்திகள் அப்போது பரபரத்தது இங்கு நினைவு கூரத்தக்கது விஷயமாகும்.