மதுரை மாநாடு கேன்சல், மக்களை நேரடியாக சந்திக்க மண்டல வாரியாக மக்கள் சந்திப்புப் பயணம். !
ஓபிஎஸ்

சென்னை: மதுரையில் மாநாடு நடத்துவதற்குப் பதிலாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரித்து ஓ.பன்னீர்செல்வம் மக்களைச் சந்திக்க உள்ளதாகவும், அதற்காக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டு கடிதம் எழுதினார். ஆனால் கடைசி வரை ஓபிஎஸ்க்கு அனுமதி கிடைக்காத நிலையில், நேற்று முன்தினம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதன்பின் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ், அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் ஓபிஎஸ் திமுக பக்கம் சாய்வதாகப் பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜக தரப்பிலும் ஓபிஎஸ் தரப்பைச் சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓபிஎஸ் விரும்பினால், ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு வரும் மோடியை பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிப்படையாக அறிவித்தார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு சென்னையில் ஆலோசனை மேற்கொண்டது. அடுத்தக் கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி செப்.4ல் மதுரையில் மாநாடு நடத்தப்படும் என்று ஓபிஎஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது அந்த மாநாட்டிற்குப் பதிலாக மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரித்து ஓபிஎஸ் பயணம் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்?, தங்களுக்கு அதிமுக மற்றும் பாஜக இருவரும் செய்த துரோகம் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். முதற்கட்ட சுற்றுப்பயணம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், 2ஆம் கட்ட சுற்றுப்பயணம் பெரியளவில் எடுபடவில்லை.
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியை பின்பற்றி ஓபிஎஸ் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, நெல்லை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு இருந்து வருகிறது. இதனால் ஓபிஎஸ் இந்தப் பகுதிகள் மக்களை அதிகளவில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.