பா.ஜ.க.விற்கு எதிராக இந்தியா கூட்டணி போல் திமுக -விற்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அமித்ஷா முடிவு. !
அரசியல்

கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது, பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, இந்தியா முழுவதும் பல கட்சிகள் இணைந்து 'இந்தியா கூட்டணி' என்ற ஒரு கூட்டமைப்பை அமைத்தன.
அந்த கூட்டணியில் பல கொள்கை முரண்பாடுகள் இருந்தன. இந்துத்துவத்தை தீவிரமாக ஆதரிக்கும் சிவசேனா கட்சியும், இந்துத்துவத்தை எதிர்க்கும் திமுகவும் ஒரே கூட்டணியில் இருந்ததற்கு காரணம், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான். மற்றபடி, அதை ஒரு கொள்கை கூட்டணி என்று கூற முடியாது.
அதேபோல் தான், தற்போது திமுக மற்றும் அதன் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு மெகா கூட்டணியை உருவாக்குவதற்காக ஆலோசனை செய்து வருகிறார். அதிமுக – பாஜக கூட்டணி ஏன் ஒரு வருடத்திற்கு முன்பே இணைந்தது என்றால், அது கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்த கட்சி என்பதால், மீண்டும் ஒன்றிணைய சில காலம் ஆகும் என்பதால்தான் சில மாதங்களுக்கு முன்னரே இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, மற்ற கட்சிகள் இந்தக் கூட்டணியில் சேர்வதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. குறிப்பாக, தேமுதிக, பாமக, ஓ.பி.எஸ் – தினகரன் கட்சி, பூவை ஜெகன் மூர்த்தி கட்சி, ஜான் பாண்டியன் கட்சி, புதிய தமிழகம், பாரிவேந்தர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இருக்கின்றன அல்லது இனிமேல் வர தயாராக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஆனால், இந்க் கூட்டணி திமுக கூட்டணிக்கு சவாலாக மாறுமே தவிர, கண்டிப்பாக வெற்றி பெறும் அளவுக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். எனவேதான், விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவரையும் கூட்டணிக்குள் கொண்டுவர அமித்ஷா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சீமான் தற்போது 8% வாக்குகளை வைத்திருக்கிறார். விஜய் குறைந்தபட்சம் 10-15% வாக்குகளை பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த இரண்டு கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டுவந்தால், கண்டிப்பாக திமுக கூட்டணியை தோற்கடித்துவிடலாம் என்பதுதான் பாஜகவின் திட்டமாக உள்ளது.
கடந்த சில தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரைதான் இருந்துள்ளது. எனவேதான், சின்ன சின்ன கட்சிகள்கூட தேர்தல் முடிவை மாற்றும் என்பது தமிழக அரசியலின் திட்டமாக உள்ளது. விஜய் தனியாக போட்டியிட்டுவிட்டால், அவர் திமுகவின் வாக்குகளை சிதைத்தால் அதிமுக கூட்டணிக்கு லாபமாக இருக்கும், ஆனால், ஒருவேளை அவர் அதிமுக கூட்டணியின் வாக்குகளை தப்பித்தவறி சிதைத்துவிட்டால், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். எனவே, அந்த ரிஸ்க்கை எடுக்க விரும்பாத அமித்ஷா, விஜய்யை கண்டிப்பாக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுவார் என்று கூறப்பட்டு வருகிறது.
விஜய்யும் பாஜகவை ‘கொள்கை எதிரி’ என்று கூறிக்கொண்டாலும், சிவசேனாவும் திமுகவும் எப்படி ஒரே கூட்டணியில் இருந்தனவோ, அதேபோல், “பாஜக கூட்டணியில் திமுகவை வீழ்த்துவதற்காக இணைகிறேன்” என்று விஜய் விளக்கம் கூறலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், டிசம்பருக்கு பின்னர்தான் யாருடன் கூட்டணி என்பதை விஜய் உறுதி செய்வார் என்பதால், இன்னும் ஒரு ஆறு மாதங்கள் பொறுத்திருந்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.