சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் மோசடி.!
சென்னை

மடிப்பாக்கத்தில் சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் மோசடி செய்து 13,280 ரூபாய் பணத்தை அபகரித்து சென்ற டிப்டாப் ஆசாமிகள் மீது போலீசில் புகார்.
புத்தாண்டு அரிசி பண்டு போட்டிருப்பதாக கூறி மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மடிப்பாக்கம் சபரி சாலையில் ராஜன் என்பவர் பெரின் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இங்கு இன்று மதியம் 3.30 மணிக்கு மேல் கடைக்குள் வந்த, மாஸ்க் அணிந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் புத்தாண்டு பண்டு பிடித்திருப்பதாகவும், அதற்கு அரிசி கொடுக்க வேண்டியுள்ளது அதனால், தனக்கு 26 கிலோ எடை கொண்ட 12 அரிசி மூட்டை வேண்டும் என கடையில் வேலை பார்ப்பவர்களிடம் கேட்டுள்ளார்.
ஒரு மூட்டை 1810 ரூபாய் வீதம் 12 மூட்டை 21,720 ரூபாய் என கடை ஊழியர் தெரிவித்துள்ளார்.
பணம் அருகில் உள்ள அலுவலகத்தில் இருப்பதாகவும் அதுவும் 35,000 ரூபாயும் 100 ரூபாய் நோட்டுகளாக இருப்பதாகவும் நீங்கள் அதை வாங்கிக் கொண்டு 500 ரூபாய் நோட்டுகளாக கொடுக்குமாறும் அரிசியை அலுவலகத்தில் இறக்கி வைத்து விட்டு அரிசிக்கான காசு போக மீதமுள்ள பணத்தை 500 ரூபாய் நோட்டுகளாக எடுத்து வந்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
கடை ஊழியர்களும் இவரது பேச்சை நம்பி 12 அரிசி மூட்டைகளையும், பணம் 13,280 ரூபாயும் கடையில் வேலை செய்வோர் மூலம் அவர் சொல்லும் இடத்திற்கு எடுத்து சென்றனர்.
டிப்டாப் ஆசாமி நெம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் உடன் வந்திருந்த ஒருவருடன் ஏறி வேளச்சேரி நோக்கி செல்லும் வழியில் சென்று சூபபர் மார்க்கெட் அருகில், மேலே அலுவலகம் இருப்பதாகவும் அங்கே போய் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறி அவர்களிடம் இருந்து 13,280 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு இருவரும் தப்பிச் சென்று விட்டனர்.
மேலே சென்று பணம் கேட்ட ஊழியர்களுக்கு அதிர்ச்சி தான் மிஞ்சியது, அவர்கள் நாங்கள் அரிசி ஏதும் கேட்கவில்லை என தெரிவித்தனர்.
பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்து கடை உரிமையாளரிடம் தெரிவித்தனர். கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளுடன் மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணனிடம் புகார் அளித்துள்ளார்.
பட்டபகலில் சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் அரிசி வாங்குவது போல் நடித்து மோசடி செய்து பணத்தை அபகரித்து விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை மடிப்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.
S S K