இரவு அடித்த பலத்த காற்றின் காரணமாக மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 ற்கும் மேற்பட்ட விசைபடகுகள் கடுமையாக சேதம்.!
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் நேற்று(ஏப்.11) இரவு அடித்த பலத்த காற்றின் காரணமாக மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட விசைபடகுகள் கடுமையாக சேதமடைந்தன.
மல்லிப்பட்டினம் மற்றும் கள்ளிவயல் தோட்டத்தில் துறைமுகத்தில் நூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 150க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் தொழில் செய்து வருகின்றன.
இந்த படகுகள் மல்லிப்பட்டினம் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. இந்த காற்று காரணமாக கடலில் நங்கூரமிடப்பட்ட படகுகள் கரையை நோக்கி தள்ளப்பட்டன. படகுகள் ஒன்றோடு ஒன்று மோதத் தொடங்கின. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகளும் ஒன்றோடு ஒன்று மோதின. இதனால் மீனவர்கள் விரைந்து தங்கள் படகுகளில் ஏறி, படகை இயக்கி காற்றுக்கு எதிராக படகை இயக்கினர். தொடர்ந்து 11 மணி வரை இந்த காற்றின் தாக்கம் இருந்தது. அதன்பிறகு மெல்ல மெல்ல காற்றின் வேகம் குறைந்தது. அதன்பிறகு மீண்டும் படகை நிறுத்தி விட்டு மீனவர்கள் கரை திரும்பினர்.
செய்தியாளர்
அசாருதீன்
இந்த காற்று காரணமாக சில படகுகள் கரைக்கு தள்ளப்பட்டன. இதனால் அந்த படகுகள் பலத்த சேதம் அடைந்தன. மல்லிப்பட்டினம் சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடலில் மூழ்கியது,பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம் அடைந்து மீனவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று காலையில் அந்த படகுகளை மீனவர்கள் கிரேன் மூலம் கரையில் பராமரிப்பு மேற்கொள்வதற்காக தூக்கி வைத்தனர்.மேலும் பாதிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு அரசு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மீனவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இந்த பகுதி மீனவர்கள் நீண்ட காலமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அதனை அதிகாரிகளும் பல முறை ஆய்வு செய்துவிட்டே செல்கின்றனர்.ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.அரசு உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க சட்டமன்ற கூட்டத்திலேயே நிதி ஒதுக்கி அறிவிக்க வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.