கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். !
சென்னை
சென்னை கண்ணகி நகர் கார்த்திகா கபடி போட்டியில் இந்தியா தங்கம் வெல்ல காரணமாக இருந்தார். அவரை பாராட்டி அரசு 25 லட்சம் பரிசு தொகை கொடுத்தது.
அரசு மட்டுமின்றி தனியாரும் நிறைய பேர் உதவிகளை செய்துள்ளார்கள். கார்த்திகா விளையாட்டு வீராங்கனையாக மட்டுமின்றி, தனது மக்களின் சார்பாக அரசியலையும் பேசியிருந்தார். இந்நிலையில் கண்ணகி நகரில் மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
பஹ்ரைனில் நடந்த மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, 'கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதேபோல் கண்ணகி நகரிலேயே அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட, சிறந்த கபடி மைதானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கபடி வீரர், வீராங்கனைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் கண்ணகி நகரில் தமிழக அரசின் சார்பில் கபடி மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட் பதிவில், "கபடி வீராங்கனை கார்த்திகாவின் அபார சாதனையால் தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது. கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இன்று நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மழை, வெயில் குறித்து கவலையின்றி கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற இந்த உள்ளரங்க மைதானம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். கார்த்திகா போன்ற இன்னும் பல வீராங்கனைகளை நிச்சயம் உருவாக்கும்" என்று கூறினார்.
அதேபோல் சென்னை கண்ணகி நகரில் உள்ள ஒக்கியம் மடுவின் இடதுபுறத்தில் தடுப்புச் சுவர் கட்டும் பணியினை இன்று உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர்.
