பீலாவின் இறுதி ஊர்வலத்தில் மஞ்சள் உடை அணிந்து! கொள்ளிச் சட்டியுடன் மகள் பிங்கி .!
சென்னை

சென்னை: தமிழக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசனின் இறுதி ஊர்வலம் அவரது கொட்டிவாக்கம் வீட்டிலிருந்து பெசன்ட் நகர் நோக்கி புறப்பட்ட நிலையில் ஒரு கையில் கொள்ளிச் சட்டியுடன் கண்களில் கண்ணீருடன் மகள்கள் பிங்கியும், ப்ரீத்தியும் செல்லும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.
பெசன்ட் நகர் மின்மயானத்தில் பீலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழக எரிசக்தித் துறை செயலாளர் பீலா வெங்கடேசன் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 56.
இவர் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள், அதில் பிங்கிக்கு திருமணமாகிவிட்டது. ப்ரீத்தி அமெரிக்காவில் படித்து வருகிறாராம். இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ராஜேஷிடம் இருந்து பீலா விவாகரத்தும் பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு தீராத தலைவலி இருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அது கேன்சர் கட்டியாக மாறும் அளவுக்கு தீவிரமடைந்திருந்ததாகவும் தெரிகிறது.
பிழைக்க வைக்க முடியாது என்கிற போதிலும் அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். கொட்டிவாக்கம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீலா வெங்கடேசனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், அமுதா ஐஏஎஸ், அபூர்வா ஐஏஎஸ், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் பீலாவின் இறுதி ஊர்வலம் கொட்டிவாக்கம் வீட்டிலிருந்து பெசன்ட் நகர் மின் மயானத்தை நோக்கி புறப்பட்டது. அவரது உடலை உறவினர்கள் தூக்கிக் கொண்டு வர பீலாவின் மகள்கள் பிங்கி, ப்ரீத்தி ஆகியோர் ஒரே மாதிரி மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து (குடும்ப பாரம்பரியமா என தெரியவில்லை) கொண்டு நெற்றியில் திருநீறு பட்டை அணிந்து கொண்டு கையில் கொள்ளிச் சட்டியுடன் புறப்பட்டனர். பீலாவின் உடலுக்கு கண்ணீர் மல்க மகள்கள் தகனம் செய்தனர். அப்போது அந்த குழந்தைகள் கதறிய காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இரு பெண்களையும் பார்க்கும் போது காண்போர் நெஞ்சம் பதைபதைக்கிறது. அப்பாவை பிரிந்து அம்மாவும் இல்லாமல் அந்த இரு மகள்களும் இனி என்ன செய்ய போகிறார்களோ என பலர் கவலையை தெரிவித்தனர்.