தலையில் வலி, புற்று நோய்க் கட்டி வெளியில் சொல்லாமல் சிகிச்சை பெற்ற பீலா வெங்கடேசன். !

சென்னை

தலையில் வலி, புற்று நோய்க் கட்டி வெளியில் சொல்லாமல் சிகிச்சை பெற்ற பீலா வெங்கடேசன். !

சென்னை: தமிழகத்தில் முதற்கட்ட கொரோனா காலத்தில் திறம்பட பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேஷன் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 56. தந்தை ஐபிஎஸ், தாய் எம்.எல்.ஏ என படித்த, வசதியான குடும்பத்தில் பிறந்த பீலா, மருத்துவம் படித்ததோடு, ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று சிறந்த நிர்வாகியாகப் பணியாற்றினார். ஆனால், அவரது இறுதிக்காலம் மிகவும் சோகமாகவே அமைந்துள்ளது. மனக்கசப்பால் கணவரைப் பிரிந்த நிலையில், மூளையில் புற்றுநோய்க் கட்டி இருப்பதால், உயிர் பிழைப்பதும் கடினம் என்பது தெரிந்தும், கடைசி வரை யாரிடமும் சொல்லாமலேயே சிகிச்சை பெற்று வந்ததாக வெளியாகியுள்ள தகவல் சோகத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராகப் பணியாற்றி மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த இவர், கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். பீலா வெங்கடேஷன் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தைச் சேர்ந்தவர்.

இருப்பினும் பிறந்ததும், வளர்ந்ததும், கல்வி கற்றதும் என அனைத்தும் சென்னையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சாத்தான்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசன் மற்றும் முன்னாள் டிஜிபி எஸ்.என்.வெங்கடேஷன் ஆகியோரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பீலா வெங்கடேஷன்

கல்வியில் ஆர்வமுள்ள இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று மருத்துவத் துறையில் தன்னை நிரூபித்தார். பின்னர் இந்திய குடிமைப்பணியில் சேரும் கனவை நோக்கி முயற்சி செய்து, 1997 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடக்கத்தில் பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பணியாற்றிய பீலா வெங்கடேஷன், மத்திய ஜவுளித்துறை மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

பீலா ஐஏஎஸ்

தமிழக கேடரைப் பெற்று மாநிலத்துக்கு வந்து, செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத்துறை இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றிய பீலா வெங்கடேஷன், 2019 ஆம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை செயலாளராகப் பொறுப்பேற்றார். கொரோனா தொற்றுநோய் பரவல் முதல் கட்டத்தில், மக்களுக்கு நேரடியாகத் தகவல் வழங்கி, மாவட்டங்களுக்குச் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திறம்படக் கையாள்வதன் மூலம் பெரும் பாராட்டைப் பெற்றார். மக்கள் நம்பிக்கையுடன் தொடர்பு கொண்ட முகமாக இவர் விளங்கினார். பீலா வெங்கடேஷன் முன்னதாக ஐ.பி.எஸ் அதிகாரி ராஜேஷ் தாஸைத் திருமணம் செய்து கொண்டார்.

கணவர் ராஜேஷ் தாஸ்

குடும்பப் பிரச்சனைகள் காரணமாக விவாகரத்து பெற்று, "பீலா ராஜேஷ்" என்பதிலிருந்து "பீலா வெங்கடேஷன்" எனப் பெயரை மாற்றிக் கொண்டார். அவரது முன்னாள் கணவர் ராஜேஷ் தாஸ், பாலியல் குற்ற வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதாகக் குறிப்பிடத்தக்கது. பீலாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்; ஒருவர் திருமணம் செய்துவிட்டார், மற்றவர் வெளிநாட்டில் படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகத் தீராத தலைவலி மற்றும் மூளையில் கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோய்க் கட்டி காரணமாக அவதியுற்ற பீலா வெங்கடேசன், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றிருந்தார்.

மூளை புற்றுநோய்

அதிலும், பல மாத முயற்சிகளுக்கும் பிறகும் பலனின்றி, புதன்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், உறவினர்கள், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நோய் பாதிப்பு காரணமாக முக அமைப்பு மாறிய நிலையில் இறுதி காலத்தில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சக ஐஏஎஸ் அதிகாரிகளைக்கூட பீலா ஐஏஎஸ் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதைவிடச் சோகம் தரும் ஒரு விஷயம் தெரிய வந்திருக்கிறது. அதாவது கடந்த சில மாதங்களாகத் தீராத தலைவலி காரணமாக பீலா வெங்கடேஷன் அவதியுற்று வந்ததாகச் சொல்லப்படுகிறது.

புற்றுநோய் கட்டி

தொடர்ந்து பரிசோதனை செய்தபோதுதான் மூளையில் அவருக்கு கட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் அதிர்ச்சி தரும் விதமாக அது புற்றுநோய் கட்டி என்பதும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முயற்சித்தாலும் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற அதிர்ச்சி தகவல் பீலா வெங்கடேசுக்கு தெரிய வந்திருக்கிறது. இருந்தபோதும் அதனை யாரிடமும் சொல்லாமல் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்திருக்கிறார் பீலா.

உயிரிழப்பு

இந்த நிலையில் தான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடல்நலம் மிகவும் குன்றியதால் தரமணியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது. வசதியான குடும்பத்தில் பிறந்து, நன்றாகப் படித்து உயர் பதவிகளை வகித்தாலும் தனது இறுதிக் காலத்தில் மன வலியோடும், தீராத தலைவலியுடன் தான் பீலா ராஜேஷ் உயிரிழந்தார் என்ற தகவல் அவரது உறவினர்களையும் பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.