அழகிரிக்கு நேர்ந்த நிலை தான் செந்தில் பாலாஜிக்கு, கரூரிலிருந்து காணாமல் போவார் என ஆதவ் அர்ஜுனா காட்டம். !
தமிழக அரசியல்

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி அரசியலில் இருந்து காணாமல் போனதை போல், கரூரில் இருந்து செந்தில் பாலாஜி காணாமல் போவார் என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கரூர் காவல்துறை செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஆதவ் அர்ஜுனா, விரைவில் தவெக ஆட்சி அமைந்த பின் கரூர் சுத்தம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கரூர் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் எஸ்ஐடி அமைத்திருந்த நிலையில், ஒரு வாரமாக விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணையை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தவெகவின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் ஏற்கப்பட்டதால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்காக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆதவ் அர்ஜுனா டெல்லியில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
இதுதொடர்பாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கரூர் காவல்துறை தான் எங்களை அன்று அழைத்து சென்று, தொண்டர்கள் மீது தடியடி நடத்தி நிறைய பிரச்சனைகளை உருவாக்கிவிட்டார்கள். அந்த பிரச்சனைக்கு காரணமே கரூர் போலீஸ் தான். காவல்துறையில் 90 சதவிகிதம் பேர் நல்ல எண்ணத்துடன் இருக்கிறார்கள். பெரம்பலூர் எஸ்பி எங்களுக்கு சிறந்த ஆலோசனையை அளித்தார்.
ஆனால் கரூர் காவல்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு காலத்தில் மதுரைக்குள் சென்றால், காலினை வெட்டுவோம் என்பார்கள்.. மதுரை.. அழகிரி அண்ணே.. எங்க கோட்டை.. ரவுடித்தன அரசியல் செய்வார்கள்.. ஆனால் இன்று அழகிரி அண்ணன் அரசியலிலேயே இல்லை.. அந்த மாதிரி கரூர் விரைவில் சுத்தம் செய்யப்படும்.
விஜய் முதல்வராகும் போது, யார் யார் குற்றம் செய்தார்களோ, அவர்களை கண்டுபிடிப்போம் என்று தெரிவித்துள்ளார். கரூர் சம்பவம் நிகழ்ந்த போதே தவெக தரப்பில் செந்தில் பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் செந்தில் பாலாஜி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்திருந்தார்.